» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 3:36:09 PM (IST)

தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.  அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் ந.சு. சுப்பையா பிள்ளை இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4-வது மகனாக கடந்த 1946 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல்லை கண்ணன். இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவர். பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்று தேர்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக பலமுறை செயல்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், இளம் வயது முதலே கட்சியில் இணைந்து  பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.  காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பிரசாரம் மேற்கொண்டவர். சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது, அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியவர்.

பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த நிலையில், பிரசாரத்திற்காக அவர் நெல்லை வருகை தந்தபோது இவரது வீட்டில் மதிய உணவு எடுத்துக்கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். 

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை. தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், உடல் நலக்குறைவால் காலமானார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் 

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தாவது: பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

‘தமிழ்க்கடல்’ திரு. நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory