» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாய்மையின் இலக்கணமாக அற்புதம்மாள் விளங்குகிறார் : முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

புதன் 18, மே 2022 5:03:10 PM (IST)

தன்னுடைய மகனுக்காக எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அந்த எல்லை வரை சென்று போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையினுடைய இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளன், அவரை இன்றைக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசினுடைய மூத்த வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எழுவர் விடுதலையில், திமுக அரசு முனைப்போடு செயல்படும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில், மாநிலத்தினுடைய உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

மாநில அரசினுடைய கொள்கையில், அதனுடைய முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது மிகமிக முக்கியமான ஒன்று. ஆளுநர் செயல்படாத நேரத்தில், நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் கேட்கத் தேவை இல்லை என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலமாக, மாநில அரசினுடைய அரசியல், கொள்கை முடிவுகளில் தன்னுடைய அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதியாகி இருக்கிறது. 

மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது. 32 ஆண்டுகால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்திருக்கக்கூடிய அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அந்த பேரறிவாளனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், வரவேற்பையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தன்னுடைய மகனுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அந்த எல்லை வரை சென்று போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையினுடைய இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.

தாமதமாக கிடைத்திருந்தாலும், ஒரு மிக முக்கியமான வரலாற்றை பெறக்கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மட்டுமல்ல, மாநில உரிமைகளும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் இது வரையில் வரவில்லை. இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது வந்ததற்குப் பிறகு, சட்ட வல்லுநர்களோடு நாங்கள் கலந்துபேசி, வழக்கறிஞர்களோடு கலந்துபேசி அதற்குப் பிறகு மற்ற 6பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory