» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டம் : அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!

புதன் 18, மே 2022 12:38:30 PM (IST)தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் ரூ.6.78 கோடியில் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (மே 18ம் தேதி) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு புனரமைப்பு பணியை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: "தமிழகத்தில் ஆறு-ஏழு நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. காற்றாலை மின்சாரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது. 

2 நாட்கள் மழை காரணமாக மின் நுகர்வு குறைந்தது. அனல் மின்சாரத்துடன் 60 சதவீத காற்றாலை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. சமமான மின் விநியோகத்திற்காகவே அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உபரி மின்சாரத்தை விற்பனைக்காக எந்தெந்த மாநிலங்களுக்கு மின்சாரம் தேவை எனக் கேட்கப்பட்டுள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கான மின்சார தேவை காரணமாக மின்வெட்டு, மின்தடை உள்ளது. 

தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். 6,200 மெகாவாட் மின்சாரம் சொந்தமாக உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மின் தேவையில் 25 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு களில் இதனை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம்.

முந்தைய ஆட்சியில் சேதமடைந்த மின்மாற்றிகள் மட்டுமே மாற்றப்பட்டு வந்தன. ஒரே நேரத்தில் 24,000 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். 4.5 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு காத்திருந்த நிலையில் 6 மாதங்களில் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory