» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார் - அமைச்சர் பொன்முடி

வெள்ளி 13, மே 2022 3:06:00 PM (IST)



புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா பல்கலையின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இன்று நடந்தது. விழாவுக்கு கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில், அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசியதாவது: இது பெண்கள் பல்கலைகழகமா அல்லது இருபாலர் பல்கலைகழகமா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் தற்போது பட்டம் பெற்றவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக பட்டம் பெறுகின்றனர்.

இதன் மூலம் பெண்கள் அதிகளவில் கல்வியில் சிறந்துள்ளதை இதை காட்டுகிறது. பதக்கம் பெற்றவர்களில் கூட பெண்கள் தான் அதிகம். ஆண்களை அங்கு காணவில்லை. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் கடந்து இன்று அதிகளவில் பெண்களும் படிக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். தமிழகத்தில் இன்று படிப்பில் பெண்கள் ஆர்வமாக உள்ளனர். இதுதான் திராவிட மாடல். இது பெரியாரின் மண்.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. குறிப்பாக இந்திக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. இந்தி படித்தால் உடனே வேலை கிடைத்து விடுமா? இந்தி மொழியை கட்டாயமாக்க கூடாது. தமிழ் மாணவர்கள் விரும்பிய மொழிகளை படிக்கட்டும். முதலில் தமிழ். இரண்டாவதாக ஆங்கிலம் இவை இரண்டும் இங்கு முதன்மையானது. இதுவே தமிழகத்தின் கல்விக்கொள்கை. 3வதாக எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் கற்றுகொள்ளட்டும். ஆனால் இதனை தான் கற்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். மாணவர்கள் கல்வியுடன் சேர்ந்து தொழில் கல்வியையும் கற்க வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். தொழிற்சாலைகள் அதிகமுள்ள கோவையில் தொழில் முனைவோர்கள் அதிகம் வர வேண்டும். அதற்கான ஆய்வுகளை மாணவர்கள் செய்ய வேண்டும்.

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலை கொடுப்பவர்களாக நீங்கள் வளர வேண்டும் இதுவே வளர்ச்சி. நமது கவர்னரும் அனைத்து விஷயங்களிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும் கவர்னர் தமிழக மாணவர்களின் நிலை மற்றும் தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் தலைவர் சிவன் முதன்மை விருந்தினராக பங்கேற்றார். இணைவேந்தரும், அமைச்சருமான பொன்முடி, பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ், கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தி.மு.க வடவள்ளி பகுதி பொறுப்பாளர் வ.ம.சண்முக சுந்தரம், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory