» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

புதன் 11, மே 2022 11:31:04 AM (IST)

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும்’’ என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்தல் வாக்குறுதிப்படி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வராத தி.மு.க. அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சுட்டிக்காட்டி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று 24-01-2018 அன்று பேசி இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, 4-04-2018 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-06-2018 அன்று தி.மு.க. சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும், நிதி அமைச்சருடைய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன் தி.மு.க.வின் பொருளாளரும், பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தெரிவித்து இருந்தார்.

இதிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதில் தி.மு.க.வும், மத்திய அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன்மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற மாநில முதல்-அமைச்சர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory