» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவில் இணைந்தது ஏன்? திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா விளக்கம்!

திங்கள் 9, மே 2022 11:26:17 AM (IST)



திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவருடைய மகன் சூர்யா சிவா. சூர்யா சிவா தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் பரவியது. இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சூர்யா சிவா நேற்று வந்தார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார். 

அவருக்கு அண்ணாமலை பா.ஜ.க.வின் உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் சூர்யா சிவா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் கட்சியாக வளர்ந்து வருகிறது. அதனால், பா.ஜ.க.வில் இணைந்தேன். தி.மு.க.வில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், குடும்ப ரீதியாகவும் ஒரு சில பிரச்சினைகள் இருந்து வருகிறது.

எனவே, எனது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் சேரலாம் என பா.ஜ.க.வில் இணைந்தேன். பா.ஜ.க.வில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உழைப்புக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க. விளங்குகிறது. நான் பா.ஜ.க.வில் பதவிக்காக சேரவில்லை. நான் உழைக்கிறேன் அதற்கான அங்கீகாரம் மட்டும் கொடுங்கள் என்று தான் கூறி உள்ளேன்.

தி.மு.க.வில் உட்கட்சி அரசியல் கடுமையாக உள்ளது. எனது தந்தை என்னை அங்கீகரிக்கும் நிலையில் இல்லை. என்னை அண்ணாமலை அண்ணன் ஏற்றுக்கொண்டதே போதும். வருங்காலத்தில் மொத்த தி.மு.க.வும் பா.ஜ.க.வின் பக்கம் வர இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory