» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகை, பணத்திற்காக தொழிலதிபர் - மனைவி கொலை: 1000 சவரன் நகைகள் மீட்பு- டிரைவர் கைது!

ஞாயிறு 8, மே 2022 7:56:16 PM (IST)

சென்னை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர். இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு: தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவிலேயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.

தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர். பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றி தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியை கொலையாளிகள் இருவரும் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலையில் ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியதும், முதல் மாடியில் வைத்து மனைவி அனுராதாவை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர். கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தை கொன்றுள்ளனர்.

பின்னர் இருவரது உடலையும் போர்வையில் சுற்றி காரில் எடுத்துச் சென்று மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவிராய் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நகை பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இதன் எடை 9 கிலோவாகும். 60-ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1 மணி அளவில் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போலீஸ் பிடியில் சிக்காமல் எப்படியாவது நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட முடிவு செய்து காரில் வேகமாக சென்றனர். 6 அல்லது 7 மணி நேரம கழித்திருந்தால் நேபாளம் சென்றிருப்பார்கள். ஆனால் அதற்குள் ஆந்திரா போலீசாரின் துணையுடன் கொலையாளிகள் இருவரையும் பிடித்து விட்டோம்.

கிருஷ்ணாவின் தந்தை பண்ணை வீட்டில் காவலாளியாக இருந்துள்ளார். சிறு வயதில் இருந்தே கிருஷ்ணாவுக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினரை தெரியும். இதனால் மயிலாப்பூர் வீட்டில் அவருக்கு தனி அறையையும் ஒதுக்கி கொடுத்திருந்தனர். இவருக்கு 15 வயதில் மகன் உள்ளான். அவனை டார்ஜிலிங் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்க முயற்சித்தபோதுதான் ரவிராயுடன் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் பிறகே இருவரும் சேர்ந்து கொலைகொள்ளை சம்பவத்துக்கு விரிவாக திட்டம் போட்டு இரட்டை கொலையை செய்துள்ளனர்”இவ்வாறு கூடுதல் கமிஷனர் கண்ணன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory