» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் கார்மேலறம் நின்று செல்லும் : தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 7, மே 2022 11:55:11 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் கார்மேலறம் நின்று செல்லும் என தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வரவேற்றுள்ளது. 

குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து பெங்களூர்க்கு தினசரி ரயில் 2014-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.  இந்த ரயில் பெங்களூரில் இருந்து தினசரி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ராசிபுரம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 07:40 மணிக்கு வந்தடைகிறது. 

மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து தினசரி இரவு 7:10 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 09:20 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி  மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து இந்த 11 மாவட்ட பயணிகளுக்கு பெங்களூர் செல்லத்தக்க வகையில் இயக்கப்படுகிறது. 

இந்த ரயில் மட்டுமே தமிழகத்தில்  உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில் ஆகும். ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து  இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகளால் தொடர்ந்து வைக்கப்படுகின்றது.

இந்த ரயில் ஓசூருக்கு பிறகு பெங்களூரு கண்டோன்மென்டில் நின்று பின்னர் கடைசி நிலையமான பெங்களூர்க்கு காலை 9.20 மணிக்கு சேருகின்றது. பெங்களுரில் உள்ள கார்மேலறம் ரயில் நிலையம் அருகில் சர்ஜாபூர் சாலை, சில்க் போர்டு, மாரத்தஹள்ளி, சுற்றிலும் தமிழர்கள் ஏராளமானோர்  தங்கியுள்ளனர். இந்த பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கு கார்மேலறம் ரயில்வே நிறுத்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும். 

இந்த ஸ்டேஷனில் நிறுத்தம் இல்லாததாலும், பெங்களூரு கண்டோன்மென்டில் மக்கள் இறங்குவதாலும், மக்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல வண்டிகள் மற்றும் ஆட்டோக்களை முன்பதிவு செய்ய வேண்டியிருப்பதால், சாலையில் தேவையற்ற போக்குவரத்தை உருவாக்குகிறது. மக்கள் தங்கள் வீட்டிற்கு செல்வதற்கு அதிக நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில் பணிபுரியும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த ரயிலை கார்மேலறம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் பலனாக இந்த ரயில் தற்போது கார்மேலறம் ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுப்பிக்கப்பட்ட ரயில் கால அட்டவணையின் படி இந்த ரயில் நாகர்கோவிலிருந்து பெங்களூர் மார்க்கம் பயணிக்கும் போது ஓசூருக்கு காலை 7:00 மணிக்கு, கார்மேல்ரகத்துக்கு 7:30 மணிக்கு போய் சேரும் காலஅட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 

ஆகையால் தென்மாவட்டங்களில் இருந்து நாகர்கோவில் - பெங்களூர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முன்பதிவு செய்யும் போது கார்மேலறம் ரயில் நிலையத்துக்கு (நாகர்கோவில் - கார்மேலறம்) என முன்பதிவு செய்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த கார்மேலறம் நிறுத்தத்தில் குறைவான அளவு பயணிகள் பயணம் செய்தால் இந்த நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு விடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் முன்பதிவு செய்து அதிக பயணிகள் பயணம் செய்தால் மட்டுமே இந்த தற்காலிக நிறுத்தம் நிரந்தர நிறுத்தமாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

ஓசூர் நகரத்தில்  தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்ற காரணத்தால் இந்த ரயிலில் ஓசூர் ரயில் நிலையத்தை அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலில் ஓசூர் செல்லும் பயணிகளும் கார்மேலறம் ரயில் நிலையத்துக்கு என முன்பதிவு செய்து ஒசூரில் ஏறி அல்லது இறங்கி பயணம் செய்யலாம் என்ற ஆலோசனையும் பயணிகள் சங்கத்தினர் வைக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory