» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உட்பட 12 பேர் பலி: அதிகாரபூர்வ அறிவிப்பு

வியாழன் 9, டிசம்பர் 2021 8:17:38 AM (IST)



குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் (63), அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படைத் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் கோவைக்கு நேற்று காலை வந்தார். சாலை மார்க்கமாக குன்னூர் வழியாக வெலிங்டன் செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீர் மாற்றமாக வான் வழியாகச் செல்ல முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டரில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள் எல்.எஸ்.லிடர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சத்பால், பிரித்விராஜ் எஸ். செளஹான், தாஸ், பிரதீப்.ஏ, கே.சிங், வருண் சிங் ஆகிய 14 பேர் பயணித்தனர்.

சூலூரில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் பகல் 12.20 மணிக்கு வெலிங்டனை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பகல் 12 மணிக்கு குன்னூர் அருகேயுள்ள காட்டேரி மலைப் பாதையையொட்டி அமைந்துள்ள நஞ்சப்பசத்திரம் பகுதி மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மலைப் பகுதியில் இருந்த மரத்தில் ஹெலிகாப்டர் மோதியது.

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொது மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிஷங்களில் அந்த இடம் ராணுவம், காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

உடல்கள் மீட்பு: சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து 10 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, மாலை 6.10 மணி அளவில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் சடலங்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

குரூப் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் வந்ததையடுத்து அவர்களுடன் சேர்ந்து பொது மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்ற இடத்துக்கு ஸ்ட்ரெச்சர்களைக் கொண்டு செல்ல வசதி இல்லாததையடுத்து காயமடைந்தவர்களைப் பொதுமக்கள் உதவியுடன் போர்வைகளில் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர்.

விழுந்து எரிந்ததா?

விபத்து குறித்து முதலில் கிடைத்த தகவலின்படி பனிமூட்டம் காரணமாக தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர், மலைப் பகுதியில் இருந்த பெரிய மரத்தில் மோதியதில் நிலைதடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்ததாகவும், பிறகு அதன் எரிவாயு டேங்க் பகுதி தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே, தீப்பிடித்து எரிந்தபடி ஹெலிகாப்டர் விழுந்ததை நேரில் பார்த்ததாக அப்பகுதி மக்கள் சிலர் கூறியுள்ளனர். இதில் எந்தத் தகவல் உண்மையானது என்பது அதிகாரபூர்வமான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்: 

விபத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்து சம்பவ இடத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், ராணுவ உயர் அதிகாரிகள், கோவை சரக ஐ.ஜி. ஆர்.சுதாகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவையில் இருந்து 6-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். சுமார் 12 மணிக்கு விபத்து ஏற்பட்டதையடுத்து துரித வேகத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகள் பிற்பகல் 3.10-க்கு நிறைவடைந்தன.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு  நேற்று மாலை 5 மணிக்கு வந்தார்.  அவருடன் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவும் வந்தார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சாலை மார்க்கமாக இரவு 9 மணி அளவில் குன்னூர் சென்றடைந்தார். தொடர்ந்து வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி அலுவலகத்தில் ராணுவ உயர் அதிகாரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் தனது இரங்கலைப் பதிவு செய்தார்.

ராணுவ அதிகாரிகள் இரங்கல்

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 13 பேரின் மரணத்துக்கு ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், "விபின் ராவத்தின் தலைமைப் பண்பும் ஆற்றலும் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும். அவருடைய பங்களிப்புக்கு இந்திய ராணுவம் எப்போதும் கடன்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory