» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புகைப்படம், கையொப்பத்தினை மாற்ற இயலாது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவுரைகள் வெளியீடு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:56:57 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கான அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வு குறித்த 201 பக்கங்கள் அடங்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* விண்ணப்பதாரர் www.tnps-c-ex-ams.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறைப்பதிவு என்பது பதிவுசெய்த நாள் முதல் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதுமுடிந்த பின்னர், விண்ணப்பதாரர் ஒருமுறை பதிவினை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை செலுத்தி கட்டாயம் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

* இணையவழி விண்ணப்பித்தினை சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பதாரர் புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை மாற்ற இயலாது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவற்றை பதிவேற்றம் செய்ய எச்சரிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் வழியில் விண்ணப்பித்த பிறகு, இதுதொடர்பான எந்தவித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

* தேர்வு கட்டண சலுகையை பொறுத்தவரையில், எஸ்.சி., எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீரமரபினர், முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 3 முறையும், முன்னாள் ராணுவத்தினர் 2 முறையும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

* சாதி சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரருக்கான சான்றிதழ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சான்றிதழ், தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை போலியாக சமர்ப்பித்தல், ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சேதங்களை ஏற்படுத்தி இருந்தால் அந்த தேர்வர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதோடு, அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

* அதேபோல், தேர்வறையில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல், மின்னணு உபகரணங்களை வைத்திருத்தல், ஆள்மாறாட்டம், தேர்வு நடைபெறுவதை முறியடிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டாலும் தேர்வு எழுத நிரந்தமாக தடை விதிக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

* தேர்வு மையத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வரத்தவறியவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* கொள்குறி வகை வினாத்தாளில் தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற மை கொண்ட பந்துமுனை பேனாவை தவிர வேறு பேனாவை பயன்படுத்துவது, இணையவழி விண்ணப்பத்தில் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடத்தில் தேர்வு எழுதாமல் வேறு பாடத்தில் மாற்றி தேர்வு எழுதுவது, ஓ.எம்.ஆர். விடைத்தாளை முறையாக நிரப்பாமல் இருத்தல் போன்றவற்றால் தேர்வரின் விடைத்தாள் செல்லாததாக கருதப்படும்.

* தேர்வு மையத்துக்கு வரும்போது ஹால்டிக்கெட் கண்டிப்பாக கொண்டுவருவதுடன், ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை கொண்டுவர வேண்டும்.

இதில் குறிப்பாக காலிப்பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவு மற்றும் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பேசப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட அறிவுரைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory