» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வால் மாணவன் தற்கொலை: தொலைபேசி மூலம் பெற்றோருக்கு கமல்ஹாசன் ஆறுதல்!

ஞாயிறு 12, செப்டம்பர் 2021 8:47:00 PM (IST)

நீட்தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பெற்றோர்களிடம் கமல்ஹாசன் தொலைபேசி மூலமாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வரும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நீட் தேர்வு நடப்பதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் சோகம் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வு நடந்து விட்டது. சேலம் மேட்டூர் அருகே உள்ள கூளையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது மகன் தனுஷ்(19) நீட் தேர்வு பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே இரண்டு முறை நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில், மூன்றாவது முறை இன்று நீட்தேர்வு எழுத இருந்தார் தனுஷ். ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போய்விடுவோமோ என்ற பயத்தில் நேற்று இரவு தற்கொலை செய்து பரிதாபமாக உயிரை விட்டுள்ளார் தனுஷ். மாணவரின் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மாணவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மாணவர்கள் இதுபோல் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம். நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து வேதனையான சம்பவம் நடந்து வரும் போதிலும் நீட் தேர்வை ரத்து செய்யாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார். மாணவரின் மரணத்துக்கு திமுக அரசே காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். 

இந்த நிலையில் நீட்தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பெற்றோர்களிடம் கமல்ஹாசன் தொலைபேசி மூலமாக ஆறுதல் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலமாக இறந்த மாணவனின் பெற்றோரிடம் ஆறுதல் கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''இந்த வேதனையான தருணத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன். என்ன சொல்லி ஆறுதல்படுத்துவது என்பதே எனக்கு தெரியவில்லை. நீங்கள் எங்களுடன் இருங்கள். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். அடுத்த குழந்தைகளுக்கு இதுபோன்ற நடைபெறாமல் தடுப்போம். உங்களுடன் என்றும் ஆதரவாக இருப்பேன் என்று அவர்களிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே இன்று காலை நீட் தேர்வு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், ''ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory