» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி பலி : கடையின் உரிமையாளர் உட்பட 2பேர் கைது!

சனி 11, செப்டம்பர் 2021 4:40:58 PM (IST)



ஆரணியில் பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக இறந்தார். 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டர் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலை ஆரணியை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் நடத்தி வருகிறார். ஆரணி நகரில் பிரபல ஓட்டல்களில் ஒன்றான இந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆரணிக்கு சென்றால் இந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். 

இந்நிலையில் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மனைவி பிரியாதர்ஷினி¸ மகன் சரண்(14)¸ மகள் லக்ஷனா(10) ஆகியோருடன் அந்த கடைக்குச் சென்று பிரியாணி மற்றும் தந்தூரி வகைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி¸ மயக்கம் ஏற்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

பிறகு ஆனந்த்¸ பிரியதர்ஷினி¸ சரண் ஆகியோர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி  லக்ஷனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதே போல் நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டரில் தந்தூரி சிக்கன்¸ பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டவர்களுக்கும் வாந்தி- மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும்¸ தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் (30) பாத்திமா¸ முகமது(4) விஷ்ணு¸ சீனிவாசன்¸ யாகூப்¸ திலகவதி¸ சரவணன்¸ ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எத்திராஜ் நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன்¸ சந்தியா மற்றும் குழந்தை பிரணவ்(4)¸ செங்கம் தாலுக்கா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன்(21)¸ மோனிகா(15)¸ கார்த்திகா (16)¸ லோகேஷ் (15) உள்பட  19 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்கள் சாப்பிட்ட உணவில் என்ன கலந்திருந்தது என்பது தெரியவில்லை. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவல் கிடைத்ததும் ஆரணி கோட்டாச்சியர் கவிதா¸ ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் ஆகியோர் சம்பவம் நடந்த ஓட்டலுக்கும்¸ ஆரணி அரசு மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினர். பிறகு நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டர் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் கடையின் உரிமையாளர் காதார் பாஷா, புரோட்டா மாஸ்டர் முருகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். காதர் பாஷாவுக்கு சொந்த மான மேலும் 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒட்டலில் உணவருந்தி சிறுமி பலியான சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பையும்¸ சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

adminSep 12, 2021 - 01:12:12 PM | Posted IP 190.2*****

hotel la saptale pirachinai than

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory