» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்முறையீட்டு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் விஜய் கோரிக்கை

வியாழன் 22, ஜூலை 2021 4:09:55 PM (IST)

கார் இறக்குமதி அபராதம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றத்தில் விஜய்  கோரிக்கை விடுத்துள்ளார். 

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்கத் தடைவிதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நுழைவு வரியைக் கட்டும்படி வருவாய்த்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, விஜய் தரப்பில் நுழைவு வரி கட்டுவதில் சலுகை கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகினர்.விஜய் தரப்பு வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கக் கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்பு கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரைக் கொண்டுசெல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில், மேலும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னைப் பற்றித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உரிய அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

விஜய் தரப்பின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.குமரேசன், தனி நீதிபதி உத்தரவு நகலுக்காக விண்ணப்பித்திருப்பதாகவும், ஆன்லைன் தீர்ப்பு நகலை அடிப்படையாகக் கொண்டு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும், அபராதத்தைச் செலுத்திவிட்டு வரும் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதால், வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். வழக்கைப் பட்டியலிடும் கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கின் எண்ணிடும் (to number) நடைமுறைகளை முடித்து வழக்கைப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:23:24 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory