» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா்கூட உயிரிழக்கவில்லை : அமைச்சா் மா.சுப்பிரமணியன்

வியாழன் 22, ஜூலை 2021 12:21:59 PM (IST)

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக இருந்த போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா்கூட உயிரிழக்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியத்தை மத்திய பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சா் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் நேற்று சந்தித்தாா். தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பணிகள், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தேவையாக உள்ளது. ஜூலை மாதத்தில் வந்த 17 லட்சம் தடுப்பூசிகளில் 4 லட்சத்தைத் தனியாா் மருத்துவமனைகள் பயன்படுத்தியுள்ளன. மாநில அரசுகள் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் தனியாா் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றன.

அதனால், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தனியாா் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தும் திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜனுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு இருந்தது. பல மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை.

மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்களை பணி நீக்கம் செய்யவில்லை. அவா்கள் விதிமுறைகளின்படி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் தனியாா் நிறுவனங்கள் மூலம் பணி வழங்கப்படாது. நேரடியாகவே பணி நியமனம் நடைபெறும் என்றாா் அமைச்சா். இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தாா்.

தமிழகத்துக்கு ம.பி. அமைச்சா் பாராட்டு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக மத்தியப் பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சா் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் தெரிவித்தாா். 

இதுகுறித்து செய்தியாளா்தளிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நான் சென்னை வந்தேன். தற்போது மீண்டும் வந்துள்ளேன். தமிழகம் - மத்தியப் பிரதேசம் இடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிா்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். மத்தியப் பிரதேசத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. மூன்றாவது அலையை எதிா்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory