» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாரி-கார் மோதல்: தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் பலி

செவ்வாய் 9, மார்ச் 2021 8:43:45 AM (IST)

ஆலங்குளம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்தனர். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சிவகுமார் (36). இவர் தமிழர் விடுதலை களம் கட்சியின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதே கட்சியில் கீழப்பாவூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக, பாவூர்சத்திரத்தை அடுத்த கீழ வெள்ளக்காலைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் ஹரிகரசுதன் (29) இருந்தார்.

இந்நிலையில் தமிழர் விடுதலை களம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், நெல்லையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவகுமார், ஹரிகரசுதன் மற்றும் நிர்வாகிகள் ஒரு காரில் நெல்லைக்கு சென்றனர். பின்னர் பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், இரவு 1 மணி அளவில் அவர்கள் நெல்லையில் இருந்து காரில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, முக்கூடல் அருகே இடைகால் தனியார் சர்க்கரை ஆலையில் பழுதடைந்த ராட்சத எந்திரங்களை ஏற்றிய லாரி பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் மீதுள்ள ராட்சத எந்திரமானது, லாரியின் பக்கவாட்டுக்கு வெளியே சற்று நீட்டிக் கொண்டிருந்தது.

அந்த லாரி ஆலங்குளம் அருகே நல்லூர் விலக்கு பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, எதிரே தமிழர் விடுதலை களம் கட்சியினர் வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்த ராட்சத எந்திரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார், ஹரிகரசுதன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகிய 3 ேபரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த சிவகுமார், ஹரிகரசுதன் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மோதிலால்(60) என்பவரை கைது செய்தனர். பொதுக்குழு கூட்டத்துக்கு சென்று திரும்பியபோது, தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு தமிழர் விடுதலை களம் கட்சி தலைவர் ராஜ்குமார் ஆறுதல் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory