» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் சாவு

திங்கள் 8, மார்ச் 2021 8:15:15 AM (IST)

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை மீனவ கிராமம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி கோடியக்கரைக்கு மீன்பிடி தொழில் செய்ய ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான் (வயது48) என்பவருக்கு சொந்தமான படகில் அவரும், பாம்பனை சேர்ந்த செல்வேந்திரன் (48), தோமஸ் (58), அந்தோணி (42), வினோத் (38), போஸ் (40) ஆகிய 6 மீனவர்கள் வந்தனர். கடந்த 1-ந்தேதி மதியம் இவர்கள் கோடியக்கரையில் இருந்து பெரிய படகில் (வல்லம்) மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் வலையில் ஒரு பாட்டில் சிக்கியது. 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த பாட்டில் முழுவதும் ஒரு வகையான திரவம் இருந்தது. இந்த பாட்டிலை வலையில் இருந்து எடுத்து மீனவர்கள் படகில் வைத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரும் மற்றவர்களுக்கு தெரியாமல் படகில் இருந்த அந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்தனர். பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

நேற்று காலை மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது படகில் தூங்கி கொண்டிருந்த அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரையும் மற்ற மீனவர்கள் எழுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் எழுந்திருக்காமல் மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் படகை வேகமாக ஓட்டி கோடியக்கரைக்கு வந்தனர்.

பின்னர் கரைக்கு வந்து பார்த்தபோது அந்தோணி இறந்தது தெரிய வந்தது. மயங்கி கிடந்த வினோத், போஸ் ஆகிய 2 பேரையும் சக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி போஸ், வினோத் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த அந்தோணியின் உடல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், போஸ், வினோத் ஆகியோரின் உடல் நாகை அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அந்த பாட்டிலில் இருந்தது சாராயமா? அல்லது எந்த வகை திரவம் என தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்Mar 9, 2021 - 02:20:53 PM | Posted IP 103.1*****

இந்த செய்தியில் ஏதோ பொய் இருப்பது போல் தெரிகிறது. விசாரணை தேவை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thalir Products

Thoothukudi Business Directory