» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள்: ஸ்டாலின்

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 3:36:54 PM (IST)

தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் - தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு - ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தமிழக மக்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள்.

2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி! 

இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. 

கரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.

2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா!

தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும், தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும் - தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதலமைச்சர்  பழனிசாமி.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

வேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட - மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி - இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள்.  அதிமுக அரசின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Nalam Pasumaiyagam

Thalir Products





Thoothukudi Business Directory