» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண புரோக்கரை காரில் கடத்தி 23 பவுன் நகை பறிப்பு : மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சனி 23, ஜனவரி 2021 8:51:47 AM (IST)

முப்பந்தல் அருகே பணகுடியைச் சேர்ந்த திருமண புரோக்கரை காரில் கடத்தி கொடூரமாக தாக்கி 23 பவுன் நகையை பறித்துச் சென்றதோடு, அவரை சாலையில் வீசி சென்றனர்.

குமரி மாவட்டம் முப்பந்தல் அருகே கண்ணுபொத்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு மயங்கிய நிலையில் முதியவர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று காலையில் அவருக்கு சுயநினைவு வந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் பணகுடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (75), திருமண புரோக்கர். கடந்த வாரம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த சிலர் கந்தசாமியை பார்க்க பணகுடிக்கு வந்தனர். அவர்கள் கந்தசாமியிடம் தங்களது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் என்றும், உங்களிடம் ஏதாவது தகவல் கிடைக்குமா? என்றனர். பின்னர் மாப்பிள்ளையின் ஜாதகத்தை பற்றிய விவரங்களை கூறி அவரை அழைத்தனர். அவர்களின் பேச்சை நம்பிய கந்தசாமி அவர்களுடன் காரில் சென்றுள்ளார். பின்னர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று கந்தசாமிக்கு உணவு வாங்கிக் கொடுத்து விட்டு மீண்டும் அவரை வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே நபர்கள் கந்தசாமி வீட்டுக்கு வந்து, ஒரு பெண் வீட்டார் பற்றி விவரம் கிடைத்துள்ளதாகவும், நீங்கள் எங்களுடன் வரவேண்டும் என்று கூறினர். ஏற்கனவே, ஒரு முறை காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்டவர்கள் தானே என்று நம்பிய கந்தசாமி அவர்களுடன் சென்றார். முப்பந்தல் பகுதியில் சென்றபோது, காரில் திடீரென கத்தியை காட்டி நகைகளை கழற்றி தா என்று மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் மறுத்ததால், சுதாரிப்பதற்குள் கத்தியால் கந்தசாமியின் தலையில் பல இடங்களில் குத்தியுள்ளனர். 

அதாவது, கத்தியால் குத்திக் கொண்டே இருந்துள்ளனர்.இதனால் அதிக ரத்தம் வெளியேறிய கந்தசாமி மயக்க நிலைக்கு சென்றார். இதையடுத்து அந்த கும்பல் முப்பந்தல் அருகே கண்ணுபொத்தை பகுதியில் காரை நிறுத்தி விட்டு கந்தசாமி அணிந்திருந்த 11 பவுன் நகை, 7 பவுன் கைச்செயின், 5 பவுன் மோதிரம் உள்ளிட்ட 23 பவுன் நகைகளை பறித்து விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதன்பிறகு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கந்தசாமி கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதை கண்டு ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கந்தசாமி வீடு உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.திருமண புரோக்கரை மர்ம கும்பல் காரில் கடத்தி கத்தியால் குத்தி நகையை பறித்துச் சென்ற சம்பவம் நெல்லை, குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory