» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

வெள்ளி 15, ஜனவரி 2021 6:46:19 PM (IST)

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன. 15) அவர் காலமானார். ஞானதேசிகன் உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே  ஞானதேசிகன்மறைவுக்கு ஏராளமான கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் கொண்டவர் ஞானதேசிகன். ஞானதேசிகனை பிரிந்து வாடும் உற்றார், உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு செய்தியால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த ஞானதேசிகன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழிசை செளந்தரராஜன்:

யாருடைய மனமும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் ஞானதேசிகன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்:

தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டியவர் ஞானதேசிகன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர்.  கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்:

பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் பி.எஸ்.ஞானதேசிகன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல் வேறுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கத்தோடு பழகும் பண்பு கொண்ட ஞானதேசிகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் சார்பில் இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thalir Products

Thoothukudi Business Directory