» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புரெவி புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளி கனமழை - சாலைகளில் வெள்ளம்

வெள்ளி 4, டிசம்பர் 2020 3:36:35 PM (IST)

வங்க கடலில் உருவான புரெவி புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

நிவர் புயல் காரணமாக கடந்த மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கனமழை பெய்தது. சென்னை மாநகரம், புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறடி ரோடு, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன.

புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக இங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர். தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரும் வடிய தொடங்கி இருந்தது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான புரெவி புயலால் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு முதல் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிவர் புயலின்போது பெய்த மழைபோல புரெவி புயல் காரணமாகவும் சென்னையில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் தேங்கி உள்ளது.

சென்னையின் மைய பகுதிகளான அடையாறு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை காரணமாக முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அசோக்நகர் பகுதியில் இரு வாகனங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு மழை நீர் தேங்கியிருந்தது. புரசைவாக்கம் தானா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது. கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், அயனாவரம், அம்பத்தூர், மாதவரம் பால்பண்ணை, மஞ்சம்பாக்கம், வடபெரும் பாக்கம், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த முறை பெய்த மழையால் தேங்கியது போன்றே இந்த மழைக்கும் அதிகளவு மழை நீர் தேங்கி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதன் காரணமாக வேலைக்கு சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.சென்னையில் பல்வேறு சாலைகளில் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. அதில் மோட்டார்சைக்கிள்கள் சிக்கி பழுதானது. பல இடங்களில் மழை வெள்ளத்தில் மூழ்கியும் இரு சக்கர வாகனங்கள் பழுதாகி நின்றது. இதனால் வெள்ளத்தில் நடந்தபடியே மோட்டார்சைக்கிளை ஆண்களும், பெண்களும் தள்ளி சென்றனர்.

காலை நேரம் என்பதால் மெக்கானிக் கடைகளும் அதிகளவில் இல்லை. இதனால் நீண்ட தூரம் தள்ளி சென்ற பிறகே அதனை சரி செய்ய முடிந்தது. மழை காரணமாக கடந்த 2 வாரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை 2-வது முறையாக மீண்டும் முடங்கி உள்ளது. மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மழை வெள்ள பாதிப்பை தற்காலிகமாக சரி செய்ய அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளும், புறநகர் பகுதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். சென்னையில் இன்று காலை முதலே சூரியன் தலைகாட்டவில்லை. தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கடும் குளிரும் வாட்டுகிறது. காலை நேரம் மாலை நேரத்தை போன்று காட்சி அளித்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட 2 புயல்களால் சென்னை மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory