» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு மண்டபம்: எஸ்.பி.பி.சரண் பேட்டி

திங்கள் 28, செப்டம்பர் 2020 11:31:46 AM (IST)

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சென்னை தாமரைப்பாக்கத்தில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கூறினார்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. இதுகுறித்து பண்ணை வீட்டில் நேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், பிரபல பாடகருமான எஸ்.பி.பி.சரண் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘50 நாட்களாக எங்கள் குடும்பத்துடனேயே இருந்து அப்பா மீண்டு வரவேண்டும் என்று எங்களோடு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். அப்பா இப்போது தாமரைப்பாக்கத்தில் உள்ள எங்கள் தோட்டத்தில் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். எங்கள் குடும்பம் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக இறுதிச்சடங்கு நடந்தது. இதற்காக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும், உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, தாமரைப்பாக்கம் நண்பர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி. சென்னையில் இருந்து தாமரைப்பாக்கம் வரை எனது தந்தையின் உடலை கொண்டு வரும்போது, சாலைகளில் நின்று கொண்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

சத்தியமாக நான் சொல்கிறேன். அப்பா இந்த அளவுக்கு பெரிய ஆள் என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்பாவும், அவருடைய இசையும் மக்களின் சொத்து. அவருக்கு இங்கு அருமையான நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தினரின் ஆசை. அதற்கான திட்டம் உருவாக்கப்படும். இது அருமையான இடமாக, ‘மேப்’பில் அப்பா பெயர் போட்டால் இந்த இடத்தை காட்டுவது மாதிரி ஒரு நினைவு இல்லமாக கட்டி அர்ப்பணிப்போம். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான திட்டத்தை வெளியிடுவோம். வெளியூரில் உள்ள பலர் அப்பாவின் நினைவிடத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். உள்ளூர் போலீசாரிடம் பேசி அதற்கான ஏற்பாடுகள் செய்து 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும்.இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறினார்.

வதந்திகளை பரப்பாதீர்கள்: சரண் வேண்டுகோள்!

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் சர்ச்சை தொடர்பாக எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். 

எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பின்பு ,எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது; அப்பா கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.

இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம். இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது. மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்ஜிஎம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள் என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory