» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 1:57:22 PM (IST)

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட எஸ்பிபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பிபி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்தது. அவரது மரணத்திற்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை குறிப்பு
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஜூன் 4, 1946ல் நெல்லூர் மாவட்டம், ஆந்திராவில் பிறந்தார்.  1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் சரண் ஆகியோர் உள்ளனர். இதில் மகன் சரணும் தந்தையைப் போன்றே சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஆவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory