» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரும் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை வருகை : கொரானா தடுப்பு பணிகளை ஆய்வு

புதன் 5, ஆகஸ்ட் 2020 10:52:55 AM (IST)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ஆம்தேதி நெல்லை வருகிறார். அப்போது அவர், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுகாதாரத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கொரோனாவை கட்டுப்படுத்த உரிய முடிவுகளை எடுத்து வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அப்போது அந்தந்த மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும், புதிய பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 6-ஆம் தேதி மதுரை, திண்டுக்கலில் நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு, மறுநாள் 7-ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு நெல்லைக்கு வருகிறார். காலை 10 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுக்கிறார். முன்னதாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் விவசாயிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பிறகு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை அவர் சந்திக்கிறார். பின்னர் காரில் இங்கிருந்து சேலம் புறப்பட்டு செல்கிறார். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் ஆய்வு நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory