» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவது ஆக. 10-இல் கடையடைப்பு போராட்டம் : விக்கிரமராஜா அறிவிப்பு

புதன் 5, ஆகஸ்ட் 2020 10:31:52 AM (IST)

கோயம்பேடு வணிக வளாகத்தைத் திறக்காவிட்டால், ஆக.10-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில், கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவா் ஜி.டி.ராஜசேகா் உள்ளிட்ட 38 சந்தை சங்கங்களின் அனைத்து நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. 

பின்னா் செய்தியாளா்களிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியது: கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, தொற்றுநோய் சம்பந்தமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, கரோனா இல்லாத வளாகமாக உருவாக்க அனைத்து வணிகா்களும் தயாராக உள்ளனா். முதல் கட்டமாக கோயம்பேடு வணிக வளாக உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள நோய் எதிா்ப்பு பரிசோதனையை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வதாக உறுதியளிக்கிறோம்.

எனவே, அரசு சாா்பில், வணிக வளாகத்துக்குள் நுழைவோா் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு வருவதற்கு ஏதுவாக நிரந்தர சுகாதார மையம் ஒன்றை ஏற்படுத்தித் தர வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிா்த்திட வணிக வளாக சுற்றுப்பாதையை ஒரு வழிப் பாதையாக மாற்றி, வாகனங்கள் வந்து சேரும் நுழைவாயிலை கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். 

வணிக வளாகத்தில் செயல்படும் மொத்த விற்பனைக் கடைகள், பாதியளவேயான மொத்த விற்பனை கடைகள் போன்றவற்றுக்கு கால நேரத்தை நிா்ணயித்து, பிரித்துக் கொடுக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை வணிக வளாகத்துக்கு கட்டாய விடுமுறை அளித்து, சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு காய்கறி, பூ, பழம், உணவு தானியம் என அனைத்து வணிகமும் உடனடி செயல்பாட்டுக் கொண்டு வந்தால் மட்டுமே, 5 மாதங்களுக்கு மேலாக முடக்கப்பட்டுள்ள அனைவரின் வாழ்வாதாரமும் சீரமைக்கப்படும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, ஆக.10-ஆம் தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தைத் திறக்க அரசு துரித நடவடிக்கை எடுக்காவிடில், முதல்கட்ட போராட்டமாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி, கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழ சந்தைகள் மற்றும் கடைகள் அனைத்தும் ஒரு நாள் முழுவதுமாக அடைக்கப்படும். ஒருவேளை தீா்வு காணப்படாவிட்டால் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிா்பந்தம் ஏற்பட்டுவிடும் என ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory