» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொரோனாவால் பலியான நர்ஸ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு : 5 பேர் மீது வழக்குப் பதிவு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 12:45:49 PM (IST)

ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவமனை செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்ட 5 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (35). ஆற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.2ம் தேதி) சிகிச்சை பலனின்றி அர்ச்சனா உயிரிழந்தார். இதையடுத்து, அர்ச்சனாவின் உடலை ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி நேற்று (ஆக.3ம் தேதி) நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த ஒரு தரப்பினர் தங்கள் குடும்பத்துக்கு உரிய இடத்தில் பள்ளம் தோண்ட எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்டனர். இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. கல்லறைத் தோட்டத்தின் முன்பாக ஏராளமானவர்கள் திரண்டனர்.

இந்தத் தகவலையடுத்து, ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், டிஎஸ்பி பூரணி ஆகியோர் விரைந்து சென்று பிரச்சினைக்குரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கெனவே பள்ளம் தோண்டிய இடத்தில் பாறை குறுக்கிட்டதால் குறைவான ஆழத்தில் உடலை அடக்கம் செய்யும்போது தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து அதிக அளவிலான கிருமிநாசினியைப் பயன்படுத்தி அடக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்ய சம்மதித்தனர். சுமார் இரண்டு மணிநேரப் பிரச்சினை, அலைக்கழிப்புக்குப் பிறகு செவிலியரின் உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், செவிலியர் அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்டதுடன் அரசுப் பணியாளர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, பரசுராமன், கணேசன், பிரபு, சரவணன் ஆகியோர் மீது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory