» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இறுதிச்சடங்கை மகன்கள் செய்யக்கூடாது: உருக்கமான கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த தம்பதியர்

வெள்ளி 24, ஜூலை 2020 11:19:00 AM (IST)

"மகன்கள் யாரும் இறுதிச்சடங்கை செய்யக்கூடாது" என்று உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு 3 மகன்களை பெற்ற தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் செம்பியம் மேல்பட்டி பொன்னையன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குணசேகரன் (65). இவருடைய மனைவி செல்வி (54). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி, குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். கடைசி மகன் ஸ்ரீதர் (29) தனது தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். 

குணசேகரன் தச்சுவேலை செய்து வந்தார். சரிவர வேலை கிடைக்காததால் தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை செய்து வந்தார். ஊரடங்கு நேரத்தில் மகன் ஸ்ரீதரும், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சரியாக வேலைக்கு எதுவும் செல்லவில்லை. ஊரடங்கு நேரத்தில் குணசேகரனுக்கும் வேலை இல்லாததால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் பரிதவித்து வந்தார். வருமானம் இல்லாததால் வீட்டு வாடகையையும் கொடுக்க முடியாமல் தவித்தார். தன் மகன்களிடம் வீட்டு வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் பண உதவி கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மகன்கள் பண உதவி செய்யாததால் மனமுடைந்த குணசேகரன், செல்வி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்னதாக குணசேகரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், "எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரே இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் உடலை தருமாறு மகன்கள் கதறியதால் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் வயதான தம்பதியின் உடலுக்கு போலீசார் மரியாதை செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications






Black Forest Cakes



Thoothukudi Business Directory