» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு : காவல் நிலையம் முற்றுகை

வியாழன் 23, ஜூலை 2020 6:30:26 PM (IST)


தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரை வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரை முத்து (வயது 65). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாக வந்தத் தகவலையடுத்து கடையம் வனத்துறையினர் நேற்று இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனராம். இந்நிலையில் அணைக்கரை முத்துவிற்கு நெஞ்சுவலி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அணைக்கரை முத்து உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன் திரண்டனர். மேலும் வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆலங்குளம் எம்எல்ஏ டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த தென்காசி டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் , கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஹரிகரன் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள், தென்காசி தாசில்தார் சுப்பையன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் மருத்துவ குழு அமைத்து பிரேத பரிசோதனை செய்யபடும். இதில் சாட்சியாக உங்கள் ஊரை சேர்ந்த 5 பேர் செல்லுங்கள், இந்த வழக்கு நீதிபதி விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து எம்எல்ஏ டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா கூறுகையில் இறந்த அணைக்கரைமுத்து குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory