» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சைக்கிளிலேயே சென்னையிலிருந்து நெல்லைக்கு வருகை : பெரியவரின் சுவாரசிய அனுபவம்

வெள்ளி 17, ஜூலை 2020 1:51:41 PM (IST)கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சைக்கிள் மிதித்தே சென்னையிலிருந்து நெல்லைக்கு பெரியவர் ஒருவர் வந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள தெய்வநாயகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (73). கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் கணக்காளராக உள்ளார். கரோனா பொது முடக்கம் அமலாகும் முன்பே சென்னையில் தன் மகனின் வீட்டுக்குச் சென்ற பாண்டியன், திடீர் பொது முடக்கத்தால் அங்கேயே முடங்கினார். சொந்த கிராமம் வருவதற்கு இ - பாஸ் எடுக்கும் வழிமுறைகளும் அவருக்குத் தெரியவில்லை. அதனால் தனது பேரனின் சைக்கிளை எடுத்துக் கொண்டு நெல்லைக்குக் கிளம்பிவிட்டார் பாண்டியன். 

இதுகுறித்து பாண்டியன் கூறும் போது,எனது இளைய மகனுக்கு உடம்பு சரியில்லை என தகவல் வந்ததால் சென்னை சென்றேன். அது முடிந்து கிளம்ப முயன்ற போது பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் நகரத்து வாழ்க்கை ஒத்து பாேகவில்லை. ஆகவே ஊருக்கு போகலாம் என முடிவு செய்தேன். இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி, திண்டிவனத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு பேருந்து போகும் என்றார்கள். உடனே எனது பேரனின் சைக்கிளை எடுத்துட்டுத் திண்டிவனத்துக்கு 90 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்றேன்.

ஆனால் அங்கு பேருந்தின் மேல் கேரியர் இல்லை என்றும் அதனால் சைக்கிளை ஏற்ற மறுத்தனர். இதனால் சைக்கிளில் விழுப்புரம் வந்தேன். அங்கேயும் பேருந்து கிடைக்கவில்லை. வயதான நபர் சைக்கிளில் வருவதை பார்த்த யாரோ ஒருவர் எனக்கு 50 ரூபாயும், தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார். தொடர்ந்து சைக்கிளிலேயே உளுந்தூர்பேட்டை வரை வந்தேன்.அதன் பிறகு ஒரு காய்கறி வண்டியில் நானும், எனது சைக்கிளுமாக திருச்சி வரை வந்தோம்.

இந்தக் கரோனா நேரத்திலும் இப்படி வழிநெடுக, எனக்கு உதவிகள் கிடைத்தது. மதுரை, விருதுநகர் பக்கம் வரும்போது நல்ல மழை. கோவில்பட்டி பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் சைக்கிளை உருட்டியபடி வந்தேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து படுத்துவிட்டு, காலையில் எனது ஊருக்கு கிளம்பினேன் என்றார். ஜூன் 23-ம் தேதி சென்னையை விட்டுக் கிளம்பியவர், ஜூலை ஒன்றாம் தேதி தனது ஊரான தெய்வநாயகப்பேரியை அடைந்திருக்கிறார். ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலையும் முடித்துக் கொண்டவர் இன்று தனது சொந்த வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். சைக்கிளிலேயே சென்னையிலிருந்து நெல்லை வந்த அவரை அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory