» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

புதன் 15, ஜூலை 2020 10:27:38 AM (IST)

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்து இருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை சமீபத்தில் அளித்தது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கொரோனாவால் பாதிக் கப்பட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோரும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட் டுள்ள அமைச்சர் சி.வி. சண்முகமும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதேபோல், அமைச்சர்கள் ஒ.எஸ்.மணியம், நிலோபர் கபில் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை. மாலை 5 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.கூட்டத்தில், பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடுவது தொடர்பாகவும், பள்ளி- கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இம்மாதம் இறுதி வரை பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதத்தில் (ஆகஸ்டு) தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

முக்கியமாக, அரசு பள்ளிக் கூட மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கட்டாயக் கல்வி உரிமை வழங்கும் சட்டத்தின் கீழ், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் "நீட்” தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆராய்ந்து தனது பரிந்துரையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. அதில், "நீட்” தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையை தீர ஆராய்ந்த தமிழக அரசு, "நீட்” தேர்வில் தேர்ச்சி பெறும்அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருந்தது. அத்துடன் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டிலேயே 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் மூலம், எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 8 தொழில் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், மணலி, எண்ணூர் ஆகிய இடங்களில் செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory