» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசாரணை என்ற பெயரில் காவல்துறை அத்துமீறல்கள் : உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு

வெள்ளி 3, ஜூலை 2020 12:27:17 PM (IST)

காவல்துறை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கை: "சாத்தான்குளம் காவல்துறை அராஜகம் ஒற்றை நிகழ்வல்ல. தோண்டத் தோண்ட வெளிவரும் குற்றங்கள், ஒரு காவல் நிலையத்தில் இத்தனை தவறுகள் என்றால் தமிழகம் முழுவதும் நிலை என்னவாயிருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதும், காவல்துறையை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படுவதும், சிறைச்சாலை மரணங்களும் நடந்தேறிக் கொண்டேயிருக்கின்றன. காவல்துறையின் கண்காணிப்பில் நிகழும் மரணங்கள், இந்தியா முழுவதும் நடக்கும் பெருங்குற்றம். 

அதில் தமிழகம் இவ்வகை மனித உரிமை மீறல் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். காவல்துறையின் வரம்பு மீறல்கள், சாமானியனை அவமரியாதையாகப் பேசுவதில் தொடங்கி, இன்று மக்களின் பாதுகாப்பையும், வாழ்வையும் அச்சுறுத்தும் அளவுக்கு ஆளும், ஆண்ட கட்சிகள் வளர விட்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், மக்கள் பாதுகாப்பினை அச்சுறுத்தும் இந்தத் தவற்றினை வேரோடு அகற்றிட முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறது.

இதன் முதல் கட்டமாக, தமிழகத்தின் ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வரும் காவல் துறையின் சீரமைப்பை உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்திட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் காவல் துறையின் அதிகாரத்தைக் கண்காணித்திடவும், அதிகரிக்கும் பணி அழுத்தம் அவர்களைப் பாதிக்காமல் மக்கள் பணியாற்றிடச் செய்யும் வகையில் பலமுறை திட்டங்களையும், வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறது. அந்த வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றிட நீதிமன்றம் உத்தரவிடவும், கண்காணிக்கவும் வேண்டி இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் காவல் துறையினரின் தவறுகளையும், அத்துமீறல்களையும் குறித்துப் பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக, காவல்துறை புகார் அமைப்பினை அமைத்து அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்த அமைப்பில், உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைக்கும் நீதிபதிகள் இடம்பெற வேண்டும். அரசின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இயங்கும் இந்த இயக்கம் அரசியல் அழுத்தங்களில் இருந்து காவல் துறையையும், காவல் துறையின் அத்துமீறல்களில் இருந்து மக்களையும் காத்திடும் வேலையைச் செய்யும்.

ஆனால், தமிழக அரசு பெயருக்கு அமைத்துள்ள மாநில அளவிலான அமைப்பில் காவல் அதிகாரிகளே அந்தப் புகார்களை விசாரிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக அரசு நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை, மக்களின் உயிரையும் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தில் கூட முதல்வரே அதை மறைக்க முயன்று அவசர அறிக்கை விட்ட காட்சிகள் நமக்கு காவல்துறை தனித்துச் செயல்படவில்லை, ஆட்சியாளர்களின் ஆதரவோடுதான் செயல்படுகிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

2001 - 2018 வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் உயிரிழந்துள்ளனர். ஆனால், அது தொடர்பாக ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது தமிழகத்தை ஆண்ட திமுகவும், ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தில் காண்பித்து வரும் மெத்தனப் போக்கை மக்களுக்குச் சொல்லும். காவல்துறை மக்களைப் பாதுகாத்திட வேண்டும். ஆனால், காவல்துறையிடமிருந்தே மக்களைப் பாதுகாக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் இத்தனை காலம் ஆண்டவர்கள். நீதித்துறையின் உத்தரவுகளையும், மனித உரிமை மீறல்களையும், மக்கள் பாதுகாப்பையும் அலட்சியமாகக் கையாளும் இந்த அரசியல்வாதிகளை மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.

இந்தச் சீர்திருத்தங்களை தமிழக அரசினைச் செயல்படுத்த வைக்க மக்கள் நீதி மய்யம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சட்டத்தின் வழியே நம் உரிமைகளைக் காத்திடும் இப்போரில் மக்கள் நீதி வெல்லும் வரை மய்யம் போராடும். அதே நேரத்தில் இம்மாற்றங்களைச் செய்யும் பொறுப்பில் இருப்பவர்களை மாற்றும் அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது.

ஆணவக்கொலை வழக்கினில் A1 குற்றவாளியின் குற்றத்தைக் கூட நிரூபிக்காமல் வழக்காடுதல், உரிமைகளைக் கேட்டுப் போராடும் மக்களின் மீது அடக்குமுறை, கேள்வி கேட்பவர்கள் மீது காவல்துறையின் ஏவல், மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற அதிகாரிகளின் மீதான தாக்குதல்கள் என தமிழகத்தையும், தமிழர்களையும் கடந்த 30 ஆண்டுகளாகத் திட்டமிட்டு, நசுக்கிக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளையும் அகற்றி, தமிழகத்தைப் புனரமைத்திடும் பெரும்பணியில் பங்களிக்க மக்களை அழைக்கிறோம்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசும், காவல் துறையும் மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும். மக்களாட்சி என்பது மக்களின் ஆட்சியாகவும், மக்களுக்கான ஆட்சியாகவும் இருந்திட மக்களே தங்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்திட வேண்டிய நேரம் இது. ஒரு ஊர், ஒரு காவல் நிலையம், இரு உயிர்கள் மட்டும் பற்றியது அல்ல இந்தப் போராட்டம். பல நூறு உயிர்கள், பல்லாயிரக்கணக்கான குற்றங்கள், அநீதிகள், பல லட்சம் கோடி ஊழல் என தமிழகத்தை அரித்துக் கொண்டிருக்கும் சீர்கேட்டை செம்மைப்படுத்த மக்கள் ஒன்றுபடவேண்டிய நேரம் இது". இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MASSJul 3, 2020 - 03:59:21 PM | Posted IP 162.1*****

KARACT THALAIVA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory