» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வைரஸ் எங்களை ஒன்றும் செய்யாது: குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சவால்

வெள்ளி 5, ஜூன் 2020 12:45:07 PM (IST)

கரோனா  வைரஸ் எங்களை ஒன்றும் செய்யாது, க்வாரண்டைன் ஏரியாவிலேயே எங்களை மீண்டும் பணியமர்த்துங்கள் என மருத்து சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் கரோனாவுக்கு எதிராக சவால் விட்டுள்ளனர்.

உயிர்க்கொல்லி நோயான உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடூர கரோனா மக்களைக்காக்க முன்னணியில் நிற்கும் காவல்துறையினரிடமும் தொற்றி கலங்கடித்து வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது வரை 49 காவலர்கள் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளதாக இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் முதன்மைப் பணியாளர்களாக முன்நின்று செயலாற்றி வருவது காவல்துறையினர்தான். உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கோரோனா தொற்று ஏற்பட்டு அதனை எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாக அதனை எதிர்கொண்டு பலரும் மீண்டு பணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்தியன் போலீஸ் பவுண்டேஷனின் அதிகாரபூர்வமான ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் காவல்துறையையே மிரள வைக்கிறது. இந்தியா முழுவதும் காவல்துறையில் சுமார் 30 கோடியே 46 லட்சத்து 805 பேர் பணிபுரிகிறார்கள். இதில் 5,791 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் உள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10,783 காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர், இந்தியா முழுவதும் 49 போலீசார் கரோனா தோற்றால் உயிரிழந்துள்ளதாக இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் காவல்துறையினருக்கு கரோனா தொற்று குறைந்த அளவே உள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை சுமார் 400 மேற்பட்ட காவலர்கள் கரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் மட்டும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 401 பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் அதில் மீண்டுவருவதற்குரிய அனைத்து நடவடிக்கையையும் சென்னை நகர காவல்துறை வருவதால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக காவல்துறையினர் கரோனா விஷயத்தில் மனஉறுதியுடன் பணிபுரிந்து அதனை எதிர்த்து போரிடும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

கரோனாவால் பாதிப்படையும் காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், அதிகாரிகள் குணமடைந்து பணிக்கு திரும்பும் போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அவர்களை ஊக்கப்படுத்துவதை ஒரு மங்கள விழா போன்று நடத்தப்பட்டு வருவது போலீசார் நல்ல மன உறுதியுடன் செயல்பட வழிவகுப்பதால், தங்களை மீண்டும் கரோனா பாதித்த இடத்திலேயே பணியில் அமர்த்துங்கள் என்று காவலர்கள் கேட்கும் அளவுக்கு மனஉறுதி பெற்றவர்களாக மாறியுள்ளதாக சென்னை நகரில் பணிபுரியும் உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது தொடர்பாக ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாக தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் சுதாகர், கோட்டூர்புரம் உதவிக்கமிஷனர் சுதர்சன் தலைமையில் ஐஐடி விடுதியில் சிறப்பாக செயல்படுகிறது.

சென்னையில் கரோனாவால் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், காவலர்கள் சுமார் 400 பேர்  சென்னை ஐஐடி வளாகத்தில் மகாநதி விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 49 சதவீதம் காவல்துறையினர் சிகிச்சை முடிந்து பூரண உடல்நலத்துடன் பணிக்கு திரும்பி உள்ளனர்.தனிமைப்படுத்தப்பட்ட அவர்களிடத்தில் கமிஷனர் விஸ்வநாதன் வாரத்தில் 4 நாட்கள் வீடியா காலில் பேசி ஊக்கப்படுத்தி வருகிறார்.

மேலும் ஐஐடி வளாகம் இயற்கை சூழலுடன் காணப்படுவதால், மன ரம்மியம், அமைதிக்கு வழிவகுப்பதோடு சுத்தமான காற்றுகிடைக்க இந்த சூழல் வழிவகுக்கும். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் படிப்பதற்காக அறிவுசார்ந்த 500 புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள 32 டாக்டர்கள், 65 நர்சுகள் ஐஐடி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்’’ இவ்வாறு தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory