» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு?

வெள்ளி 5, ஜூன் 2020 9:01:05 AM (IST)

கரோனா தொற்று சிகிச்சை பெற அரசு காப்பீடு அட்டை வைத்திருப்பவருக்கு தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு கட்டணம்? என்பது பற்றி அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். கரோனா சிகிச்சைக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும், ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை அளித்தது. 

அதை நன்கு பரிசிலித்த தமிழக அரசு, கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளித்தது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து சேவைகளுக்குமான தொகுப்பு கட்டணத்தின் விவரம் வருமாறு:- நாள் ஒன்றுக்கு அனைத்து சேவைகளுக்குமான அதிகபட்ச தொகுப்புக்கட்டணம், பொது வார்டில் உள்ள அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருக்கக்கூடிய நபர்களுக்கு (கிரேட்ஏ1, ஏ2) ரூ.5 ஆயிரம். அதுபோல அங்கு கிரேட்ஏ3, ஏ4-க்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பு கட்டணமாகும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் (ஏ1, ஏ2) ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம். கிரேட் ஏ3 மற்றும் ஏ4-க்கு கட்டணம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இதுதொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெறத் தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும். முதல்-அமைச்சரால் எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளால், கரோனா சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory