» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

புதன் 3, ஜூன் 2020 4:40:37 PM (IST)

மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணத்தைதான் தமிழ்நாடு மின்சார வாரியம் வசூலிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் தொழிலகங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறை, மின் நுகர்வு அளவுகளைக் குறித்து, அதற்கான கட்டணம் வசூலித்து வருகின்றது. 100 யூனிட்டுக்குக் கீழே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண விலக்கு அளிக்கப்படுகின்றது. மின்சாரப் பயன்பாட்டை 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும்போது, 2 மாதங்களுக்கான பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்து, ஒவ்வொரு மாத பயன்பாட்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள விகிதப்படி கட்டணம் வாங்க வேண்டும்.

ஆனால், 2 மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவீட்டைக் கணக்கிடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டின் மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் என குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ. 3 என கட்டணம் பெற வேண்டும். ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகின்றது.

இதே போன்று 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக, 1,000 யூனிட்டுக்கு உண்டான கட்டண விகிதப்படி யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 கட்டணம் வாங்குகின்றார்கள். இத்தகைய கணக்கீட்டு முறையில், மின் நுகர்வோர், 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகின்றது.

இந்தப் பிரச்சினையை, மின்சார வாரிய அலுவலர்கள், அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லும்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடுதான் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயனீட்டு அளவு கணக்கிடப்பட்டு, மின்சார வாரியம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறுகின்றார்கள். 2 மாதங்களுக்கு மொத்தமாகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவை இரண்டு மாதங்களுக்கும் சரிபாதியாகப் பிரித்து மின் கட்டணம் வாங்கினால், மின்சார வாரியம் இழப்பைச் சந்திக்கும் என்று கூறுகின்றனர்.

மாதந்தோறும் மின் பயனீட்டு அளவைக் குறிப்பதற்கு, ஆள் பற்றாக்குறை, நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இந்த முறையைப் பின்பற்றுவதாக, மின்சார வாரியம் கூறுகின்றது. அதற்காக, கூடுதல் கட்டணம் வாங்குவதை நியாயப்படுத்த முடியாது. கரோனா வைரஸ் தடுப்பு பொது ஊரடங்கால் மின் பயனீட்டு கணக்கெடுப்பு நடக்காத நிலையில், கடந்தமுறை செலுத்திய கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவித்தனர்.

அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 350 யூனிட் பயன்படுத்தி இருந்தால், ரூ.650 மின்கட்டணம் மற்றும் நிலைக் கட்டணம் ரூ. 30 சேர்த்து ரூ.710 செலுத்த வேண்டும். மின்வாரிய அறிவிப்பில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் இதே தொகையை மே முதல் வாரத்தில் செலுத்தி இருப்பர். கோடை கடுமையால் மே, ஜூன் மாதங்களில் 550 யூனிட் மின்சாரத்தை அதே நபர் பயன்படுத்த வேண்டிய நிலை உருவானால், அதற்கு அவர் ரூ. 2,110 மற்றும் நிலைக்கட்டணம் ரூ. 30 என மொத்தம் ரூ. 2,140 செலுத்த வேண்டும். ஆனால் மின்சார வாரியமோ, ஏற்கெனவே செலுத்திய 350 யூனிட்டுக்கு தற்போதைய 550 யூனிட்டையும் சேர்த்து, மொத்தமாக 900 யூனிட்கணக்கிட்டு ரூ .4,420 மற்றும் நிலைக்கட்டணம் ரூ. 30 சேர்த்து, ரூ.4,450 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதில் கடந்த முறை செலுத்திய ரூ.680-ஐ (நிலுவைக் கட்டணம் அல்லாமல்) கழித்துவிட்டு ரூ. 3,770-ஐ செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் அந்த நபரிடம் இருந்து 550 யூனிட்டுக்கு உள்ளான கட்டணமாக ரூ.2,140-க்குப் பதிலாக, ரூ.1,630 கூடுதலாகச் சேர்த்து வாங்குகின்றார்கள். இவ்வாறு, மின்நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி, மக்களைச் சுரண்டும் நிலைக்கு, தமிழக மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் துயரப் படுகுழியில் தள்ளக் கூடாது. எனவே, மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணம்தான் வாங்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். இவ்வாறு, வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

சிவா கத்தார்Jun 3, 2020 - 05:00:24 PM | Posted IP 162.1*****

eppo neenka india vanthinka thalaiva.unkalukkum vayasu ippo 75 akittu ippo than sariyana makkal piratchanaikala pesi irukkinka... sabash.jei hind

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory