» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிஏஏ எதிர்ப்பு: சட்டசபை முற்றுகை போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதன் 19, பிப்ரவரி 2020 11:44:27 AM (IST)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த சட்டசபை முற்றுகை போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி முஸ்லிம்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றவேண்டும் என்றும், இதை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) சட்ட சபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான வாராகி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் இந்த போராட்டம் வலுத்துள்ளது. தினமும் மனித சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று பலவிதமான போராட்டத்தை நடத்துகின்றனர். அதுவும் இந்த போராட்டத்தில் மாணவர்கள், குழந்தைகளும் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாணவர்களை மூளை சலவை செய்து போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

சென்னையில் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதியில்லை என்று போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தும், அதை மீறி கடந்த 14-ந் தேதி வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தினர்.

ஆனால், இந்த அறிவுரையை ஏற்காத போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களையும், செருப்புக்களையும் வீசி அடித்தனர். இதில் போலீசார் பலர் படுகாயமடைந்தனர். இதனால் வேறு வழியில்லாமல், போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய தாக்குதலில் ஒரு முஸ்லிம் இறந்து விட்டதாக பொய்யான தகவலை தமிழகம் முழுவதும் போராட்டக்காரர் கள் பரப்பினர். இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழக சட்டசபையை முற்றுகையிட்டு 19-ந் தேதி (இன்று) போராட்டம் நடத்தப்போவதாக முஸ்லிம் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உருவாகிறது. எனவே, சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று மாலையில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.எல்.ராஜா ஆஜராகி, ‘அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேநேரம் சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் சூழலில், சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதித்தால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிடும். அந்த வழித்தடம் வழியாகவே தலைமைச் செயலகம், ஐகோர்ட்டு, பல்கலைக்கழகம், கல்லூரிகள், மெரினா கடற்கரை, ரிசர்வ் வங்கி என பல்வேறு இடங்களுக்கும் பொதுமக்கள் செல்லவேண்டும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றதுபோல மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் முற்றுகை போராட்டத்துக்கு தடை கோருகிறோம்’ என்றார்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் மூத்த வக்கீல் ரபுமனோகர், தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், மாநில அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், சிறப்பு அரசு பிளடர் விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் தன் வாதத்தில், ‘ஏற்கனவே சென்னை மாநகர காவல்துறை சட்டத்தின்படி சென்னையில் எந்தவொரு போராட்டங்களும் கடந்த 13-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடத்தக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் அதற்கு 5 நாட்களுக்கு முன்பாக போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆனால், தமிழக சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் (17-ந் தேதி) தான் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நிராகரித்து நேற்று (18-ந் தேதி) போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்’ என்று கூறினார்.

அப்போது இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று வக்கீல் விஜயலட்சுமி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.சந்திரசேகர், ‘இந்த முற்றுகை போராட்டத்தினால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்’ என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளது. தற்போது இந்த முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனரிடம் 5 நாட்களுக்கு முன்பு மனு கொடுப்பதற்கு பதில், 2 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 17-ந் தேதிதான் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி 5 நாட்களுக்கு முன்பு அனுமதி மனு கொடுக்கவில்லை.

யாரும் சட்டத்தை கையில் எடுத்து செயல்படக்கூடாது. எனவே வருகிற மார்ச் 11-ந் தேதி வரை சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இடைக்கால தடை விதிக்கிறோம். அதேநேரம், தடையை மீறி போராட்டம் நடத்தினால் போலீசார் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கை மார்ச் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் மத்திய, மாநில அரசுகள், தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், வண்ணாரப்பேட்டை துணை போலீஸ் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory