» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்

சனி 14, டிசம்பர் 2019 5:24:00 PM (IST)

ராசிபுரம் அருகே பாட்டியை கொன்றுவிட்டு, மாணவியை கடத்த முயன்ற ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி விஜயா (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த 3 ஆண்டு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து விஜயா தனது 3 மகள்களுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். விஜயா பள்ளிபாளையம் பகுதியில் வேலைக்கு சென்றார். அப்போது தர்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வையார் காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சாமுவேல் (40) என்பவருக்கும், விஜயாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். பின்னர் விஜயாவும், சாமுவேலும் அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். இதற்கிடையே விஜயாவின் மூத்த மகளுக்கு திருமணம் ஆனது. 2-வது மகள் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 3-வது மகள் வசந்தி (17) அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் அங்குள்ள ஒரு மெடிக்கலில் பகுதி நேர ஊழியராக வசந்தி பணிபுரிந்து வந்தார். வசந்தி தற்போது விஜயாவின் மாமியார் தனத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மாமியாரிடம் உள்ள வசந்தியை அழைத்து வருமாறு சாமுவேலிடம், விஜயா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சாமுவேல் நேற்றிரவு 9 மணியளவில் தனத்தின் வீட்டிற்கு சென்றார். அப்போது வசந்தி அங்கு இல்லை. இதனால் அங்கு காத்திருந்த சாமுவேல், வசந்தி வந்ததும் தன்னுடன் அனுப்புமாறு தனத்திடம் கூறினார். அப்போது எனது மருமகளே என்னுடன் இல்லை, நான் எப்படி பேத்தியை உன்னுடன் அனுப்ப முடியும் என்று தனம் கேள்வி எழுப்பிதுடன் வசந்தியை அனுப்ப முடியாது என்று மறுத்தார். அப்போது சாமுவேல் வசந்தி வந்ததும் அவரை கடத்தி செல்வேன் என்று கூறினார். 

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. உடனே கதவை பூட்டிய சாமுவேல் ஆசிட் ஊற்றி கொலை செய்வதாக தனத்தை மிரட்டினார். அப்போதும் வசந்தியை உன்னுடன் அனுப்ப முடியாது ஏன்று திட்டவட்டமாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமுவேல் தனத்தை கத்தியால் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே தனத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீட்டின் கூரையில் ஏறி வீட்டிற்குள் பதுங்கி இருந்த சாமுவேலை பிடிக்க முயன்றனர். அப்போது ஆசிட் வீசுவதாக சாமுவேல் மிரட்டினார்.

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கினர். அப்போது பொதுமக்களை தாக்கிய சாமுவேல், 10-க்கும் மேற்பட்டோர் மீதும் ஆசிட் வீசியதுடன் தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாமுவேலை ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். அப்போது போலீசாரும் சாமுவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த சாமுவேல் மயங்கி விழுந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் சாமுவேல் துடிதுடித்து இறந்தார். கொல்லப்பட்ட சாமுவேல் மீது தர்மபுரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsNalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory