» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த மதுரை இளைஞர் சண்முக சுப்பிரமணியன்!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 10:45:35 AM (IST)

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டது.

அதில் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் நீலம் மற்றும் பச்சை நிறப்புள்ளிகளாகக் காணப்படுகிறது. அவற்றில் பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட குப்பைகளாகவும், நீல நிறப் புள்ளிகள் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்காலம் எனவும் கூறப்படுகிறது. தற்போது அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை சரியாக கண்டறியமுடியவில்லை. வரும் அக்டோபர் மாதம் நிலவின் அப்பகுதி வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும். எனவே அப்போது அப்பகுதியில் அதிக புகைப்படங்களை எடுக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை, சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் (33) தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர். விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதாக அறியப்படும் இடத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவில் அதன் பாகத்தை கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா நன்றியும், பாராட்டும் தெரிவித்தது. 

இதுதொடர்பாக சண்முக சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, எனக்கு விண்வெளி அறிவியல் தொடர்பாக சிறு வயது முதல் தனி விருப்பம் இருந்து வருகிறது. இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு தொடர்பான நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள நான் தவறியதில்லை. அவ்வகையில், நாசா வெளியிட்ட இரு புகைப்படங்களையும் அடுத்தடுத்து வைத்து ஆய்வு செய்தேன். அதில் ஒன்று நாசாவால் ஏற்கனவே எடுக்கப்பட்டது. மற்றொன்று புது புகைப்படம் ஆகும். இந்த ஆய்வு சற்று கடுமையாகவும், நிறைய நேரத்தை செலவிடக்கூடியதாகவும் அமைந்தது. ஒருவழியாக எனது கண்டுபிடிப்பை ட்விட்டரில் அக்.03-ஆம் தேதி பதிவிட்டேன் என்றார்.

நாசா மூத்த விஞ்ஞானி பெட்ரோ என்பவர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது. தனியொரு மனிதனின் கண்டுபிடிப்பு எங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. சந்திரயான்-2 மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒருவர் எங்கள் தகவல்களைப் பயன்படுத்தி விக்ரம் லேண்டர் இருப்பிடம் தொடர்பான அரிய தகவலை கண்டுபிடித்துள்ளார். அந்த புகைப்படத்தின் ஒவ்வொரு பிக்ஸலாக ஆய்வு செய்து இதை சாத்தியப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மைDec 4, 2019 - 07:03:21 PM | Posted IP 162.1*****

காவி பாய்ஸ் கிட்ட தெரிந்தால் வெளிநாட்டு கைக்கூலி சொல்லுவாங்க

கர்ணராஜ்Dec 3, 2019 - 09:19:22 PM | Posted IP 162.1*****

எங்களின் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் 2003 -07 என்பதில் பெருமை

K.AshokDec 3, 2019 - 12:05:33 PM | Posted IP 108.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications
Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory