» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

வெள்ளி 29, நவம்பர் 2019 5:17:09 PM (IST)

சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தி.நகரைச் சேர்ந்த வாலிபரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.

சென்னை, அண்ணாசாலையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர்கள் பயன்படுத்தும் அலுவலகம், கூட்ட அரங்கு, நிர்வாக அலுவலகம், திருமணமண்டபம், நூலகம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் உள்ளன. கட்சித்தொண்டர்கள், தலைமை அலுவலக நிர்வாகிகள், செய்தியாளர்களால் நிரம்பி வழியும் அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு வந்த மிரட்டல் போன் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்ட்ரா முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க மும்பை சென்றிருந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கட்சிக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்றிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் விரைவில் வெடிக்கும் என்று கூறி போனை வைத்துவிட்டார்.

இதனால் போலீசார் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.  மேலதிகாரிகள் உத்தரவின்பேரில் உடனடியாக அறிவாலயத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் போலீசார் சென்றனர். அறிவாலயத்தை அங்குலம் அங்குலமாக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அவரது செல்போன் எண்ணை வைத்து தேடிவந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் கணேசன் (37) என்பதும், சென்னை - தியாகராய நகர் எஸ்.பி.கார்டன் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. 

மது போதைக்கு அடிமையான கணேசன் மதுபோதை தலைக்கேறிய நிலையில்  தனது செல்போன் மூலம் போன் வெடிகுண்டு மிரட்டல் செய்துள்ளார். கணேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தான் குப்பை பொறுக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அனைத்துப் பிரச்னைக்கும் தன்னுடைய மனைவியே காரணம் என்றும், அவர் தனக்கு சூனியம் வைத்து விட்டதால் தான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாகவும் அந்த வெறுப்பில் நேற்று திடீரென 100-க்கு போன்செய்து அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக கூறியதாகவும், மற்றப்படி வெடிகுண்டு எப்படி இருக்கும் என்று கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory