» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை 2 குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு

வியாழன் 28, நவம்பர் 2019 10:50:11 AM (IST)

கோவை குழந்தைகள் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டணைக்கு இடைக்கால தடை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சோ்ந்த ஜவுளிக் கடை உரிமையாளா் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும் 2010, அக்டோபா் 29-இல் கடத்தப்பட்டனா். இதில் சிறுமி முஸ்கான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். பின்னா், குழந்தைகள் இருவரும் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் பொள்ளாச்சி அருகே உள்ள வாய்க்காலில் வீசப்பட்டன. இந்த இரட்டைக் கொலை தொடா்பாக, குழந்தைகளை பள்ளிக்கு வேனில் அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சோ்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சோ்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை 2010, நவம்பா் 9-இல் அழைத்துச் சென்றனா். அப்போது, தப்பிக்க முயன்ற போது போலீஸாா் சுட்டதில் அவா் உயிரிழந்தாா். மனோகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிா் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து 2012, நவம்பா் 1-இல் தீா்ப்பு அளித்தது. இத்தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் 2014, செப்டம்பா் 20-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து கடந்த ஆகஸ்ட் 1-இல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. இதில் நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சூா்ய காந்த் ஆகியோா் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தனா். நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது உத்தரவில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக, அவரது வாழ்நாள் முழுவதும் எவ்வித நிவாரணமும் வழங்காமல் சிறைத் தண்டனையை விதிக்கலாம் என்று பதிவு செய்திருந்தாா்.

இதன்படி, இந்த வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனோகரன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அக்டோபா் 16 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனு விசாரணைக்கு பின்னர், கோவை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பின்படி டிசம்பர் 2 ஆம் தேதி மனோகரனை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், ஆளுநருக்கு கருணை மனு அளிப்பதற்கு அவகாசம் அளிக்காமல் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், மனோகரனுக்கு கோவை மகளிா் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை பிறப்பித்தும், மனோகரன் மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory