» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய வேலை வாய்ப்புகளைஉருவாக்குங்கள்; ஆட்குறைப்பு வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்

வியாழன் 7, நவம்பர் 2019 5:17:25 PM (IST)தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை வேண்டாம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் திட்டங்களை விவாதித்து உருவாக்க வேண்டுகிறேன் என கனெக்ட் 2019 மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு 2001-ஆம் ஆண்டு முதல் இணைந்து நடத்தி வரும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக Connect மாநாடு திகழ்கிறது.  2018இல் நடந்த நிகழ்சியில் தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய தொழிலதிபர்களைக் கேட்டுக்கொண்டேன். அதன் பலனாக ரூ.6,500 கோடி முதலீடு வந்துள்ளது. 60,100 பேருக்கு வேலைகிடைத்துள்ளது.

இந்த ஆண்டில் நடைபெறும் 18வது பதிப்பான இந்த மாநாட்டின் மையப் பொருள் "இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு இதயமாக இருப்பது தொழில்நுட்பம்" என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். இதற்காக இம்மாநாட்டு அமைப்பாளர்களை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் துவக்கத்தில், நான், இந்த மாநாட்டின் மையப் பொருளின் அடிப்படையில், ஏற்கனவே சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ்,

"தேசிய மின் ஆளுமைப் பிரிவின் உதவியோடு திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் ஒன்று நிறுவப்படும்; அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளை வெளிப்படைத் தன்மையுடன் செம்மையாக நிறைவேற்ற, மாநில குடும்ப தகவல் தொகுப்பு (State Family Database) ஒன்று உருவாக்கப்படும்;

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்களில் ஒன்றான நம்பிக்கை இணையம் (Blockchain) மூலம் பரிவர்த்தனைகளில் உள்ள உண்மைத் தன்மையினை அறிந்திடும் வகையில் நம்பிக்கை இணைய கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு, அரசின் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்;"மக்களைத் தேடி அரசு" என்ற திட்டத்தில் சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்திலிருந்து விண்ணப்பிக்காமல் தானாகவே வழங்கப்படும்" என்ற அறிவிப்புகளை வெளியிட்டேன். 

அதனை செயலாக்கத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."தமிழ்நாட்டில் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்த அரசும் ஆதரவாகவும், வகை செய்பவராக செயல்படுவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. நாங்கள் முதலீட்டாளர்களை அரவணைக்கும் மனப்பான்மையுடன் இருக்கும் மாநிலமாக தொடர்ந்து செயல்படுவோம். தமிழ்நாட்டில்  தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு ICT-2018 கொள்கையை சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில்  2 மற்றும் 3ஆம் நிலை பகுதிகளில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் புதுமையான சூழல் அமைப்பு உருவாவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புக் கொள்கை, 2018 வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்திக் கொள்கை விரைவில் வெளியிட உள்ளது.இக்கொள்கை பெருமளவு முதலீடுகளையும் புதிய கம்பெனிகளையும் கொண்டு வரும் என நம்புகிறேன். அனைவருக்கும் வளர்ச்சி என்ற எண்ணத்தை ஈடேற்றிட இல்லந்தோறும் இணையம் என்ற கொள்கையை செயல்படுத்தும் வண்ணம், அரசின் அனைத்து சேவைகளையும் கிராம மக்களும் அடையும் வகையில், அனைத்து கிராம ஊராட்சிகளும், பாரத்நெட் திட்டத்தை ரூபாய் 1,815 கோடி செலவில் தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும், கண்ணாடி இழை கட்டமைப்பு மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் 1 Gbps அளவிற்கு குறையாமல் இணையதள வசதி வழங்கப்படும். இத்துடன் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் தமிழ்நெட் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் அடுத்த 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட உள்ளன.

ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள், நிறுவனங்களின் நிதி நிலைமையை சீராக்கம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான கருத்துருக்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு கருத்தியல்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்க வேண்டுகிறேன். தகவல் தொழில்நுட்பவியல் துறை மேலும் வளர்வதற்காக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதிய தொழில்நுணுக்கங்களை பயன்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.


மக்கள் கருத்து

அருண்Nov 7, 2019 - 06:37:06 PM | Posted IP 106.1*****

கஷ்டம் சாரே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory