» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பண இரட்டிப்பு மோசடி தம்பதி கைது: 400 பேரை ஏமாற்றி ரூ.100 கோடி சுருட்டியது அம்பலம்!!

சனி 19, அக்டோபர் 2019 5:53:14 PM (IST)

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 400 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (38). இவரது மனைவி இந்துமதி (33). இவர்கள் தனது உறவினர்களுடன் இணைந்து ஆர்.எம்.வி. குரூப் ஆப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் அலுவலகம் சேலம்-ஓமலூர் சாலையில் கிரீன்பார்க் அவென்யூ குடியிருப்பில் இயங்கி வருகிறது. அங்கு பணத்தை முதலீடு செய்தால் 100 நாளில் இரு மடங்காக தருவதாகவும், நீண்ட நாள் முதலீட்டுக்கு 25 சதவீத வட்டி தருவதாகவும் மணிவண்ணன் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் ஊறுகாய், மசாலா பொருள், சமையல் எண்ணெய் விற்பனை செய்ய பகுதி வாரியாக வினியோக உரிமை பெற்று தருவதாகவும், அதிக அளவில் பணம் முதலீடு செய்பவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாகவும், சொகுசு கார் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்தார். இதனை நம்பி பலர் முதலீடு செய்தனர். முதலில் முதலீடு செய்த சிலருக்கு மட்டும் அறிவித்தபடி சலுகைகளை வழங்கினார். இதனை நம்பிய ஏராளமானோர் கோடி, கோடியாக முதலீடு செய்தனர். இப்படி வாங்கிய பணத்தை தனது டேபிள் முழுவதும் வரிசையாக அடுக்கி வைத்து புகைப்படம் எடுப்பார். இந்த போட்டோக்களை முதலீடு செய்தவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவார்.

இதன் மூலம் அவர்களும், அவர்களது உறவினர்களும் அதிக அளவில் பணத்தை செலுத்தினர். மேலும் அந்த போட்டேக்களை வைத்து கவர்ச்சியான விளம்பரங்களையும் வெளியிட்டார். அதனை நம்பிய சேலம் மற்றும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சிலரும் அதிக அளவில் முதலீடு செய்தனர். இப்படி பல கோடியை வசூலித்த இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து ஏமாந்தவர்கள் மணிவண்ணன் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிவண்ணன் உள்பட பலர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கினர்.

இந்த நிலையில் துபாய்க்கு சென்ற மணிவண்ணன்-இந்துமதி தம்பதியினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்தனர். இதனை அறிந்த தனிப்படை போலீசார் நேற்று மணிவண்ணன், இந்துமதியை அவர்களது வீட்டில் வைத்தே கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணயில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பெண்ணிடமும், அவர்களது உறவினர்களிடமும் மசாலா, எண்ணெய் வகைகள் விற்பனை செய்ய ஏரியா வாரியாக விற்பனை செய்ய டீலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி 63 லட்சம் வாங்கியது தெரியவந்தது.

இதே போல சேலம் சீல நாயக்கன்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் என்பவரிடம் ஆசை வார்த்தை கூறி 2 கோடியே 82 லட்சமும், குகைப்பகுதியை சேர்ந்த அரிசி கடை அதிபர் ஒருவரிடம் ரூ.3 கோடியே 53 லட்சம் பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சேலம் 5 ரோட்டில் அச்சகம் நடத்தி வருபவரிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ. 34 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக்கொண்டு 7 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதே போல சேலம் 4 ரோடு பகுதியை சேர்ந்த ராஜா, ரகுமான், ஸ்வர்ணபுரி கணேஷ், எடப்பாடி பழனிவேல், மல்லூர் ராஜா, திருச்சி பிரபுதேவ், பெங்களூரு திம்மராயன் ஆகியோரிடம் தலா ஒரு கோடி ரூபாய், ஓமலூர் அர்ச்சுணன், திருப்பூர் கார்த்திக் ஆகியோரிடம் தலா ஒன்றரை கோடி ரூபாய், ராசிபுரம் செந்தில்குமாரிடம் 60 லட்சம், தாதகாப்பட்டி சதீஷிடம், மல்லூர் ரஞ்சித், கொங்கணாபுரம் மோகனிடம் தலா 50 லட்சம் உள்பட 400-க்கும் மேற்பட்டோரிடம் 100 கோடிக்கு மேல் மோசடியில்ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 13 செல்போன்கள், 2 சொகுசு கார்கள், பத்து பவுன் செயின், 2 வளையல்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வழக்கு சம்பந்தமான போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் மணிவண்ணன் மோசடி செய்த பணத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கி உல்லாசம் அனுபவித்ததும் தெரிய வந்தது. மோசடி செய்த பணத்தில் வங்கிகளில் பல கோடி முதலீடு செய்திருப்பதும், தமிழகத்தில் பல பகுதிகளில் சொத்து வாங்கி குவித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

கைதான தம்பதியை நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்த நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் அவர் எங்கெல்லாம் சொத்து வாங்கி குவித்தார் என்றும், முதலீடுகள் குறித்தும் தெரிய வரும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மணிவண்ணனின் சகோதரர்கள் ராம், மற்றும் லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி மற்றும் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஏற்கனவே சேலத்தில் வின்ஸ்டார் இந்தியா நிறுவன உரிமையாளர் சிவக்குமார் இரட்டிப்பு பணம் தருவதாக 100 கோடிக்கு மேல் மோசடி செய்து தற்போது தலைமறைவாக உள்ளார். அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் மற்றொரு நிறுவனமும் அதே பாணியில் 100 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory