» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் பொறியாளர் கொலை: வட மாநில இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை உறுதி

திங்கள் 30, செப்டம்பர் 2019 4:26:34 PM (IST)

சிறுசேரியில் பெண் பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வட மாநில இளைஞர்களான 3 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் உமா மகேஸ்வரி (23). இவர், சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்தார். சென்னை மேடவாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பணிக்குச் சென்று வந்தார். இந்தநிலையில் 2014-ஆம் ஆண்டு, பிப்ரவரி 13-ஆம் தேதி வேலைக்குச் சென்ற உமா வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் பிப்ரவரி 14-ஆம் தேதி கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு, சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், யாரோ அவரைக் கத்தியால் குத்திப் புதரில் வீசியிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.

இதற்கிடையில் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் டி.ஜி.ராமானுஜம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுப்பையா பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவினர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி, துணைக் காவல் கண்காணிப்பாளர் வீரமணி உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல் (24), ராம் மண்டல் (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனது நண்பர் உஜ்ஜல் மண்டலுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் உமா மகேஸ்வரியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரியவந்தது.

அவர்கள் கொடுத்தத் தகவலின் பேரில், ரயிலில் ஏறி தப்ப முயன்ற உஜ்ஜல் மண்டலை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், இவர் காணாமல் போன நாளுக்கு முதல் நாள் பணி முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த உமாவை, இம் மூவரும் கிண்டல் செய்தனர். இதில் கோபம் அடைந்த உமா, அவர்களை காலணியால் தாக்கி விட்டுச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சம்பவ நாள் அன்று, பணி முடிந்து வந்த அவரை வழி மறித்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மூவரும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 1200 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை நகலும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உமாமகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டதால் பிரேதப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பதை நிரூபிக்க முடியாததால் கற்பழிப்பு குற்றச்சாட்டை மட்டும் தள்ளுபடி செய்து, வழிமறித்து கொலை செய்த குற்றத்துக்காக 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஒருவன்Oct 1, 2019 - 10:46:07 AM | Posted IP 108.1*****

நீதிபதி யாரு ? வடை நாட்டுக்காரனா ??? தூக்குத்தண்டனை ஏன் கொடுக்கவில்லை ? கொடுத்தால்தான் பிற வடநாட்டுக்காரன் திருந்துவான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory