» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா: அடிகளார் துவக்கி வைத்தார்

சனி 28, செப்டம்பர் 2019 3:18:50 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவினை, ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அகண்ட தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார். 

முன்னதாக சித்தர் பீடம் வந்த ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு மேளதாளம் முழங்க பாதபூஜையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. சித்தர் பீடத்தின் நுழைவு வாயில் மற்றும் வளாகம் முழுவதும் கலை நயத்துடன் பூக்களாலும் மின்விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

நவராத்திரி கொலு ஆலய பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கொலுவில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியான மண்டபத்தை பற்றியும் அருள்திரு அடிகளார் அவர்களின் 50 ஆண்டு ஆன்மிக பணிகளை குறிக்கும் வகையிலும் காட்சி படுத்தபட்டிருந்தது. சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இந்த ஆண்டும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக துவங்கியது. நேற்று அதிகாலை 2.00 மணிக்கு மங்கள இசையை தொடர்ந்து கருவறை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டிருந்தது.

பின்னர் பகல் 11.35 மணிக்கு அருட்திரு அடிகளார் அருட்கூடத்திலிருந்து ஈர உடையுடன் கருவறைக்கு சென்று அம்மனுக்கு தீபராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை 11.37 மணிக்கு ஏற்றி வைத்தார். பறவைகள் வேடமணிந்த சிறுமிகளிடம் அகண்ட தீபத்தை கையில் கொடுத்து சித்தர்பீடத்தை வலம் வரும்படி கூறினார். சுற்றி வந்த அகண்ட தீபத்திற்கு பல்வேறு வகையில் திருஷ்டிகள் எடுக்கப்பட்டன. புற்றுமண்டபத்தின் முன் மகிடாசுரமர்த்தினி வேடமணிந்த சிறுமி காட்சியளித்தார். 

பிரகாரத்தின் முன்பாக தாமரை சக்கரம் அமைத்து அதனை தொடர்ந்து பிரதட்சணமாக தொடங்கி முக்கோணம் அறுங்கோணம் செவ்வகம் எண்கோணம் வட்டம் போன்ற சக்கரங்கள் அமைத்து அவற்றின் மேல் அதே வடிவத்தில் அமர்ந்திருந்த கன்னியர்கள் சிறுவர் சிறுமியர் நடுத்தர இளம் மற்றும் மூத்த சுமங்களிகள் கையில் வெவ்வேறு விளக்குகள் ஏற்றி வரவேற்க அகண்ட தீபம் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டது.தொடர்ந்து அனைத்து சன்னதிகளையும் வலம் வந்த அகண்ட தீபம் 12.15 மணிக்கு கருவறையிலுள்ள தென்கிழக்கு திசையில் உள்ள அக்னி மூலையில் அமைக்கப்பட்டிருந்த தனி பீடத்தில் வைக்கப்பட்டு திருஷ்டிகள் எடுக்கப்பட்டன.

மதியம் 12.20 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களும் அகண்ட தீபத்தில் எண்ணெய் விட்டு தீப ஒளியை வழிபட்டனர்.தொடர்ந்து இலட்ச்சார்ச்சனைக்கு பெயர் பதிவு செய்தவர்களின் நட்சத்திரம் மற்றும் பெயர் சொல்லி சங்கல்பம் செய்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்திட இலட்ச்சார்ச்சனை தொடங்கியது. அப்பொழுது கருவறை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மாலை 4.00 மணிக்கு தொடங்கிய அமாவாசை வேள்வி நள்ளிரவு வரை நடைபெற்றது.நேற்று செப்டம்பர் 28ஆம்தேதி தொடங்கிய நவராத்திரி விழா அக்டோபர் 8ஆம் தேதி வரை வெவ்வேறு காப்புகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் நடைபெறும். இயக்கத்துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆன்மிக இயக்கத்தின் சென்னை மாவட்ட சாலிகிராமம் மற்றும் எண்ணூர் சக்திபீடங்களும் மற்றும் மன்றங்களும் சிறப்பாக செய்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory