» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டம் மாற்றம் தமிழகத்துக்கு பச்சைத் துரோகம் : வைகோ கண்டனம்

சனி 28, செப்டம்பர் 2019 12:51:32 PM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டம் மாற்றம் தமிழகத்துக்கு பச்சைத் துரோகம் என்று மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (Group- 2) பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களில் தேர்வு நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பட்டப்படிப்புத் தரத்தில் பொது அறிவுப் பகுதி கேள்விகள் மட்டும் வினா - விடை பாணியில் இடம்பெறும்.

இந்தத் தேர்வுகளில் அடுத்தடுத்து வெற்றி பெறுவோர் இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுதான் குரூப்-2 பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைமுறையாக இருக்கிறது. இதில் முதல் நிலைத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று மொழிப்பாடத்திலும், மீதமுள்ள 100 கேள்விகள் பொது அறிவு பாடத்திட்டமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் பாடதிட்டங்கள் மாற்றப்படுவதாக, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின்படி, 175 கேள்விகள் பொது அறிவுக் கேள்விகளாகவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் இருக்கும். பொது அறிவுப் பகுதி பட்டப் படிப்பு அளவில் உள்ளதாகும். திறனறிவுப் பகுதி 10 ஆம் வகுப்புத் தரத்திலும் இருக்கும். இரண்டு தாள்களும் சேர்த்து மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300 என்றும், குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 என்றும் இருந்து வருகிறது.

இதுவரையில் தனிப் பகுதியாக இருந்த மொழிப்பாடம், முதல்நிலைத் தேர்விலிருந்து நீக்கப்படுவதாகவும், மொழித் தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படுவதாகவும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் எழுதும் குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மொழித்தாள் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம் தமிழே தெரியாமல் ஒருவர் மாநில அரசு பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை இல்லை. ஆனால் பிற மாநிலத்தவர்களும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர டில்லிக்கு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே மாற்றி அமைத்து, தமிழ்நாடு இளைஞர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து இருப்பது மன்னிக்கவே முடியாத மாபாதகச் செயல் ஆகும்.

2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அ.திமு.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில், அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள்) சட்டம் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது. இதன்படி 7.11.2016 இல் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை, தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியில் சேரலாம் என்று தெரிவிக்கிறது.

இதன் பின்னணியில்தான் கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணி இடங்களுக்கு எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 36 பேர் அதாவது 12 விழுக்காடு நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு டெல்லி பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நுழைக்க டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே மாற்றி அமைக்க முனைந்துள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத் திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Black Forest Cakes

Anbu CommunicationsNalam PasumaiyagamThoothukudi Business Directory