» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநகராட்சி பொறியாளரை கொல்ல முயன்றதாக வழக்கு: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

புதன் 18, செப்டம்பர் 2019 11:09:09 AM (IST)

ம.தி.மு.க. கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி பொறியாளரை தாக்கிய தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கடந்த 15-ந் தேதி நடந்தது. இதையொட்டி சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ம.தி.மு.க. கட்சியின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்த ம.தி.மு.க. கொடி மற்றும் தோரணங்களை, சென்னை அடையாறு மாநகராட்சி மண்டல பொறியாளர் வரதராஜன் மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று அகற்றும் பணியில் ஈடுபட்டார். 

அப்போது அங்கு ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கொடிகள், தோரணங்களை அகற்றிய மாநகராட்சி பொறியாளர் வரதராஜன் மீதும், ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் வரதராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக வரதராஜன், சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சைதாப்பேட்டை போலீசார் ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மீது கொலைமுயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மாநகராட்சி பொறியாளர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியில் பொறியாளர் வரதராஜனை தாக்கிய ம.தி.மு.க.வினர் யார், யார்? என்று போலீசார் அடையாளம் கண்டனர். அதன் அடிப்படையில் தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி (50) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக அவரை நீதிமன்ற காவலில் போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ம.தி.மு.க. பிரமுகர் பூவராகவன் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory