» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது: பரபரப்பு தகவல்

திங்கள் 16, செப்டம்பர் 2019 11:50:47 AM (IST)

சென்னையில் 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இவரை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது-வயது 24). பட்டதாரியான இவர் சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி அன்று கவிதா வழக்கம்போல சந்தோஷமாக வேலைக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர் கவிதா வேலை பார்த்த கம்பெனிக்கு சென்று பார்த்தார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடினார்கள். கவிதா என்ன ஆனார் என்று தெரியவில்லை. பின்னர் கவிதாவின் பெற்றோர், எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள்.

எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடிவந்தார். இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் கவிதாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தி கவிதாவை துரிதமாக கண்டுப்பிடிக்க வேண்டும் என்று, ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், இந்த வழக்கில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் சுகுநாத் சிங் ஆகியோர் மேற்பார்வையில், எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், ருத்ரசுதா ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கவிதா வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் பிரித்வி(29) என்பவர் கவிதாவை கடத்திச் சென்று திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. ராஜேஷ் பிரித்வியின் சொந்த ஊரான திருப்பூர் அருகே உள்ள நொச்சிபாளையத்தில் கவிதாவை ஒரு வீட்டில் சிறைவைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர். கவிதா சிறைவைக்கப்பட்ட வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர்.

கவிதாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். கவிதாவோடு தங்கியிருந்த ராஜேஷ் பிரித்வி போலீஸ் கையில் சிக்காமல், தப்பி ஓடிவிட்டார். மீட்கப்பட்ட கவிதா ஐகோர்ட்டு மூலம், அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அடுத்தகட்டமாக ராஜேஷ் பிரித்வியை கைது செய்ய தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். ராஜேஷ் பிரித்வியின் செல்போனில் கவிதாவை பேசவைத்து, கவிதாவின் வீட்டிற்கு ராஜேஷ் பிரித்வியை நேற்று வரவழைத்தனர். ராஜேஷ் பிரித்வி நேற்று கவிதாவின் வீட்டிற்கு வந்து, அவரை தன்னோடு வரும்படி அழைத்தார். தன்னோடு வராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டலில் ஈடுபட்டார்.

அப்போது தனிப்படை போலீசார் கவிதாவின் வீட்டிற்கு சென்று, ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரைப் பற்றி அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராஜேஷ் பிரித்வி 7-வது வகுப்பு வரை தான் படித்துள்ளார். ஆனால் பல்வேறு பெயர்களில், பல்வேறு படிப்புகளை படித்துள்ளதாக கூறி ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழவைத்து, அவர்களது கற்பை சூறையாடியுள்ளார். அவர் ஒவ்வொரு ஊரிலும், பல பெயர்களில் தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன், ராஜேஷ் பிரித்வி என்று வலம்வந்துள்ளார். சில ஊர்களில் தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்றும், என்ஜினீயர் என்றும், டாக்டர் என்றும் பந்தாவாக கூறியுள்ளார்.

ஏற்கனவே 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி, கோவை, திருப்பூர், ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்கு உள்ளது. திருப்பதி போலீஸ் நிலைய வழக்கில் இவர் கோர்ட்டில் சிறை தண்டனை பெற்றுள்ளார். காளஹஸ்தி போலீசார் இவரை கோவையில் கைது செய்தபோது போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதற்காக காளஹஸ்தி போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

7-வது திருமணம் செய்ய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை குற்றப்பிரிவு போலீசில் வேலை செய்வதாக போலீஸ் சீருடையில் பந்தாவாக வலம்வந்துள்ளார். தான் 2 குற்றவாளிகளை என்கவுண்டர் முறையில் சுட்டு தள்ளியிருப்பதாகவும் இவர் கதைவிட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி, அமைந்தகரையில் கால்சென்டர் நிறுவனம் தொடங்கியுள்ளார். அதுவும் போலியான நிறுவனம் தான். 20-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடைசியாக இவர் விரித்த வலையில் கவிதா மாட்டியிருக்கிறார்.

இவரிடம் 100-க்கும் மேற்பட்ட செல்போன் சிம்கார்டுகள் உள்ளன. போலி ஆதார் அட்டை, போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டை மற்றும் கைதிகளுக்கு போடும் கைவிலங்கு, போலீஸ் சீருடை ஆகியவற்றை இவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். மருத்துவ கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பாக இவர் மீது அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். இவரை தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துவிட்டு, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். இவரது காதல் லீலைகள், மோசடி லீலைகள் பற்றி முழுமையாக விசாரணை நடத்துவோம். இனிமேல், இவர் இதுபோன்ற குற்றங்களை செய்யாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அருண்Sep 17, 2019 - 05:03:06 PM | Posted IP 106.1*****

அடேய் இங்க ஒரு பொண்ணு கெடைக்குறதே பெரிய விஷயமா இருக்கு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory