» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பாராட்டு

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 10:10:23 PM (IST)

கோயம்புத்தூர் வடிவேலம்பாளையத்தில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கு என விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை குடியரசுத் தலைவர்  வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்தார்.

தினக்கூலிகளுக்கு 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் 80 வயது மூதாட்டியான வடிவேல்பாளையம் கமலாத்தாளின் புனித சேவைக்குத் தலைவணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறது. என்னுடைய வணக்கங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக விறகு அடுப்புப் புகையில் வாடி, இட்லி சமைத்து விற்பனை செய்த கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி சமையல் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 80 வயதானவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் 1 ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் பிரபலம்.

25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். வெளியிடங்களில் உள்ள ஹோட்டல்களில் 1 இட்லி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், எளிய மக்கள் பசியாற வேண்டும் என்ற நோக்கில் கமலாத்தாள் பாட்டி 1 ரூபாய்க்கு இட்லியும், மணக்கும் சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கு எழும் கமலாத்தாள் பாட்டி தனது கூன்விழுந்த முதுகுடன் தள்ளாத வயதிலும் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு இட்லி, சாம்பார், சட்னி வைக்கும் பணியையும் தொடங்குகிறார்.

மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், அரசு அலுவலகத்தில் பணி செய்வோர், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் என பலரும் கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் இட்லி, சட்னி, சாம்பாருக்காக காலை முதலே காத்திருக்கிறார்கள். சமீபத்தில் தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும்,. சமூக ஊடகங்களிலும் கமலாத்தாள் பாட்டி குறித்து செய்தி பரவியது. 1 ரூபாய் இட்லி பாட்டியின் செய்தி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory