» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே நாடு ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது - சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:59:48 AM (IST)ஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது என திருவாரூரில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

தமிழகம் முழுவதும் ‘காவிரி கூக்குரல்’ என்ற தலைப்பில் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது குழுவினர் கடந்த வாரம் தலைக்காவிரியில் இருந்து தொடங்கினர். பயணத்தின் தொடர்ச்சியாக தஞ்சாவூர், மன்னார்குடி வழியாக நேற்று பகலில் திருவாரூர் வந்தடைந்தனர். முன்னதாக இந்த குழுவினர் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருவாரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஜக்கி வாசுதேவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘காவிரி கூக்குரல்’ நிகழ்ச்சியானது விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் விளைவாக ஏராளமான விவசாயிகளும், விவசாய சங்க தலைவர்களும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மொழிகளை ஆதாரமாக கொண்டு தான் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. ஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது. இந்தியாவில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் பிற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை. வருங்கால தலைமுறையினர் 4 மொழிகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பயணக்குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கும் பொது நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அப்பல்லோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory