» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவர் என ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்.. போலீசில் ஒப்படைத்த பெண் வீட்டார்!!

சனி 14, செப்டம்பர் 2019 4:50:48 PM (IST)

அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுவதாக ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி புனித அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த தாயன்பன் (30), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அலுவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை சென்றபோது, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குடன் (33) அறிமுகமாகினாராம். அப்போது கார்த்திக், சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் சாஸ்திரி தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருப்பகாக தாயன்பனிடம் கார்த்திக் கூறினாராம். 

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் தனது மகளுக்கு வரன் தேடுவதாக தாயன்பனிடம் கூறினாராம். அப்போது, தாயன்பன் கார்த்திக் குறித்து செவிலியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து செவிலியர் தனது மகளுக்கும்-கார்த்திக்கும் புதன்கிழமை சென்னை கொளத்தூர் குமரன் நகரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்தாராம். இதற்காக செவிலியர் கார்த்திக்கிடம் ரூ. 10 லட்சம் வரதட்சணை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புழல் ரெட்டேரி அருகே உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது கார்த்திக் செவிலியரிடம் மேலும் ரூ. 1 லட்சம் கேட்டாராம். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செவிலியர், கார்த்திக்கிடம் விசாரித்ததில் அவர் மருத்துவர் இல்லை என்பது தெரியவந்தது.  இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், அவருக்கு தர்மஅடி கொடுத்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் போலி டாக்டர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவர், இதுபோல் வேறு எந்த பெண்ணையாவது ஏமாற்றி திருமணம் செய்து உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory