» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு நிர்வாகத்தின் அடிப்படை கூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் எடப்பாடி: துரைமுருகன் கடும் தாக்கு

வெள்ளி 13, செப்டம்பர் 2019 5:27:55 PM (IST)

"அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துகிறார்" என்று, திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "நீர்மேலாண்மைக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன?” என்று முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள். நீர்மேலாண்மைத் திட்டங்கள்- நதி நீர்த் திட்டங்கள்- நீர்த் தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், கமிஷன் கலாச்சாரத்தில் முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி திரு. பழனிசாமி முதலமைச்சராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும்.

நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி தி.மு.க. ஆட்சிதான்.  "தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்” மற்றும் "காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்” ஆகிவயற்றைக் கொண்டு வந்தவர் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் என்பதைத் தமிழக நதிநீர் இணைப்பு வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. அந்தப் பதிவுகளைப் பார்ப்பது எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு நல்லது.

"தி.மு.க. ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள்” என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் திரு எடப்பாடி பழனிசாமி. 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, 5.42 லட்சம் கோடி முதலீடு வரப் போகிறது என்று பகட்டு அறிவிப்பை வெளியிட்டு - இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ள திரு. பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த 14 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தை முதலமைச்சரால் மறுக்க முடியுமா? மறுக்கட்டுமே பார்க்கலாம். அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் அவர் தி.மு.க.வைப் பார்த்து கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது;

இந்தியா முழுவதும்  பொருளாதரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பொருளாதாரப் பின்னடைவு, தொழில் பின்னடைவு இல்லை என்று முதலமைச்சர் பீற்றிக் கொள்வதை உண்மை என்று யாரும் ஏற்கமாட்டார்கள். கோவையிலும் திருப்பூரிலும் கேட்டால் சொல்வார்கள், எத்தனை தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன, எத்தனை ஆயிரம்பேர் வேலை இழந்துள்ளனர் என்ற விவரங்களைச் சொல்வார்கள்;பத்திரிகையாளர்களைக் கேட்டாலும் பட்டியல் இட்டுத் தருவார்கள்

எல்லோரும் பாராட்டிய நிர்வாகம் அளித்த எங்கள் கழகத் தலைவர் பற்றியோ, வெற்றிகரமாகத் திட்டங்களை நிறைவேற்றிய எங்கள் கழக தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ அரைகுறையான கேள்வி எழுப்பி, எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை - எந்த அருகதையுமில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

மணிSep 14, 2019 - 01:53:23 PM | Posted IP 162.1*****

கோமாளி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory