» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழமையான நடராஜர் சிலை சென்னை வந்தது

வெள்ளி 13, செப்டம்பர் 2019 10:45:52 AM (IST)ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை ரயிலில் இன்று சென்னை வந்தது.

கல்லிடைக்குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மன்னர் குலசேகர பாண்டியனால் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் திருவில்லி விநாயகர் சிலைகள் கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருடு போயின.இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து கடந்த 1984-ஆம் ஆண்டு  வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும்  உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜாராம், துணைக் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர். அதில், திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரில் உள்ள ஏஜிஎஸ்ஏ  அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி உள்ளிட்டோரின் உதவியுடன் இந்தச் சிலை கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலுடையது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசிடம் நிரூபிக்கப்பட்டது. 

இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து,  ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிலை தில்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து  ரயில் மூலம் சென்னைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பஞ்சலோக நடராஜர் சிலைக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன் பின், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி அனைத்து தரப்பினருக்கும் நன்றி. நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory